

இந்தூர்: நடப்பு ரஞ்சி டிராபி தொடரில் இந்தூரில் நடைபெறும் மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் வங்காள அணிக்காக விளையாடி வருகிறார் பந்து வீச்சாளர் முகமது ஷமி. இதன் மூலம் சுமார் ஓராண்டுக்கு பிறகு கிரிக்கெட் களத்துக்கு அவர் திரும்பியுள்ளார்.
கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தார். அதன் பின்னர் அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், அதன் பின்னர் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்து கொள்ளவில்லை. தற்போது அவர் முழு உடற்தகுதியுடன் உள்ளார். இந்த நிலையில் தான் ரஞ்சி கோப்பையில் அவர் விளையாடுகிறார்.
அவர் இந்திய அணியில் எப்போது விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை. இருப்பினும் ரஞ்சி கோப்பை தொடரில் அவரது செயல்பாட்டை பொறுத்து அதில் மாற்றங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
34 வயதான முகமது ஷமி, 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 229 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 44 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.