

நியூஸிலாந்து கிரிக்கெட்டின் பொற்காலம் இது என்றுதான் கூற வேண்டும். மகளிர் நியூஸிலாந்து அணி டி20 உலகக் கோப்பையை வென்றது, ஆடவர் டெஸ்ட் அணி, இந்திய அணியை இந்திய மண்ணில் 3-0 என்று வீழ்த்தி வரலாறு படைத்தது, நேற்று இலங்கை தம்புல்லாவில் நடைபெற்ற 2-வது, இறுதி டி20 போட்டியில் 108 ரன்களை வெற்றிகரமாகத் தடுத்து 1-1 என்று தொடரை சமன் செய்துள்ளது.
முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 108 ரன்களுக்கு சுருண்டு விட, தொடர்ந்து இலங்கையை 103 ரன்களுக்குச் சுருட்டியது. லாக்கி பெர்கூசன் ஹாட்ரிக் சாதனை புரிந்தார். அதுவும் அவர் 2 ஓவர்கள் வீசிய பிறகு காயம் காரணமாக வெளியேற நேரிட்டது. அதற்குள் அவர் இலங்கையின் 3 டாப் ஆர்டரை கழற்றி வீசினார். இதோடு கிளென் பிலிப்ஸ் கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிசயம் நிகழ்த்தினார். கடைசி ஓவரை பெர்கூசன் தான் வீசியிருக்க வேண்டும், ஆனால் பெர்கூசன் காயம் காரணமாக இல்லாததால் அந்த 20-வது ஓவரை கிளென் பிலிப்ஸ் வீழ்த்தினார்.
கிளென் பிலிப்ஸ் கடைசி ஓவரில் வீழ்த்திய 3 விக்கெட்டுகளில் பதுன் நிசாங்கா விக்கெட் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. ஏனெனில் நிசாங்கா 50 பந்துகளில் 52 எடுத்து நியூஸி வெற்றிக்குக் குறுக்காக நின்று கொண்டிருந்தார், அவர் கடைசியில் பிலிப்ஸ் பந்தை தூக்கி அடிக்க முயன்று கேட்ச் ஆனார். 108 ரன்கள் போன்ற குறைந்த ரன் எண்ணிக்கையை நியூஸிலாந்து இதுவரை வெற்றிகரமாகத் தடுத்ததில்லை.
நியூஸிலாந்து முதலில் பேட் செய்தபோது விளையாட முடியாத ஒரு பிட்சில் 11 ஓவர்களில் 52/6 என்று சரிந்தனர். ஆனால் வில் யங்கின் 30, சாண்ட்னரின் 19, கிளார்க்சனின் 24 ரன்கள் நியூஸிலாந்து அணியை ஓரளவுக்கு மரியாதையான 108 ரன்களுக்குக் கொண்டு சென்றது.
பெர்கூசனின் ஹாட்ரிக் பவர் ப்ளேயின் கடைசி ஓவரான 6-வது ஓவர் மற்றும் 8வது ஓவர்களில் வந்தது. 6வது ஓவரி முதல் 5 பந்துகளில் 3 சிங்கிள்களை கொடுத்த பெர்கூசன் 6வது பந்தில் குசல் பெரேராவை முதலில் வீட்டுக்கு அனுப்பினார். பிறகு 8வது ஓவரில் புதிய இலங்கை சென்சேஷன் கமிந்து மெண்டிஸை எல்.பி.ஆக்கினார். இது சரியான யார்க்கர். அடுத்த பந்தே அசலங்கா லெக் திசையில் ஆடப்போய் மட்டை விளிம்பில் பட்டு கேட்ச் ஆக ஹாட்ரிக் சாதனை புரிந்தார் பெர்கூசன். நன்றாகப் போய்க்கொண்டிருந்த இலங்கை 34/4 என்று ஆனது.
இவரோடு அல்லாமல் சாண்ட்னர் 4 ஓவர்கள் 14 ரன்கள் 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். பெர்கூசன் 2 ஓவர் 7 ரன் 3 விக்கெட். மைக்கேல் பிரேஸ்வெல் 4 ஓவர் 23 ரன் 2 விக்கெட், கிளென் பிலிப்ஸ் 1.5 ஓவர் 6 ரன் 3 விக்கெட் என்று அனைவருமே சிக்கனமாகவும் விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
கடைசி ஓவரை வீச பெர்கூசன் இல்லாததால் கிளென் பிலிப்ஸ் நெருக்கடியான நிலையில் வீச அழைக்கப்பட்டார், இலங்கை வெற்றிக்குத் தேவை 8 ரன்கள். அதுவும் அரைசதம் எடுத்து நிசாங்கா கிரீசில் இருக்கும் போது 8 ரன்கள் ஒன்றும் பெரிய காரியமல்ல. ஆனால் 2வது பந்தில் ஸ்லாக் ஸ்வீப் ஆடப்போய் லாங் ஆனில் கேட்ச் ஆனார் நிசாங்கா. அடுத்த பந்தே மதிஷா பதிரானா ஸ்டம்ப்டு ஆனார். தீக்ஷனா 14 ரன்களில் ஸ்ட்ரைக்கிற்கு வந்தார், ஆனால் கிளென்பிலிப்ஸ் சாதுரியமாக வீச தீக்ஷனா ஷாட் முயற்சி டாப் எட்ஜில் முடிய விக்கெட் கீப்பர் கேட்ச் பிடிக்க நியூஸிலாந்து அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் லாக்கி பெர்கூசன், தொடர் நாயகன் ஹசரங்கா.