

டர்பன்: இந்திய அணியில் விரைவில் ருதுராஜ் கெய்க்வாட் இடம்பிடிப்பார் என இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் அவரது அபார ஆட்டம் அதை நிச்சயம் உறுதி செய்யும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இன்று தொடங்கும் தென் ஆப்பிரிக்க அணியுடனான டி20 தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இடம் கிடைக்கவில்லை. இந்த சூழலில் அது அணி நிர்வாகத்தின் முடிவு என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். முதல் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தது:
“ருதுராஜ் கெய்க்வாட் அற்புதமான வீரர். அவரது ஆட்டம் அருமையாகவும், சீரானதாகவும் உள்ளது. அது அனைத்து பார்மெட்டிலும் வெளிப்படுகிறது. அவரை போலவே இன்னும் பல வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்பதை நாம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அவரது அபார செயல்பாடு இந்திய அணியில் இடம்பெறச் செய்யும் என நான் நம்புகிறேன்” என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ள ருதுராஜ் கெய்க்வாட்டை அந்த அணி நிர்வாகம் தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆஸ்திரேலியா-ஏ அணிக்கு எதிராக இந்தியா-ஏ அணியை ருதுராஜ் வழிநடத்தி வருகிறார்.