Published : 10 Jun 2018 09:26 AM
Last Updated : 10 Jun 2018 09:26 AM

உலக ஜூனியர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்க பிரியாவுக்கு ரூ. 4. 5 லட்சம் நிதியுதவி: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு

உலக ஜூனியர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்க வீராங்கனை பிரியா சிங்குக்கு ரூ.4. 5 லட்சம் வழங்குமாறு உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவரான பிரியா சிங், துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் சிறந்து விளங்கி வருகிறார். ஆனால் இவரிடம் சொந்தமாக துப்பாக்கி இல்லை. துப்பாக்கியை கடனாகப் பெற்று போட்டிகளிலும், பயிற்சியிலும் பங்கேற்று வருகிறார். மேலும் பொருளாதார நெருக்கடி காரணமாக அவர் வெளிநாடுகளில் பங்கேற்கும் போட்டிகளில் பங்கேற்க முடிவதில்லை என்று செய்தித்தாள்களில் செய்தி அண்மையில் வெளியாகியிருந்தது. பணம் இல்லாததால் 19 வயதான பிரியா சிங் ஜெர்மனியில் நடைபெறவுள்ள ஐஎஸ்எஸ்எப் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து பிரியா சிங்குக்கு ரூ.4.5 லட்சம் நிதியை வழங்குமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் முதல்வர் கூறும்போது, “திறமையான வீராங்கனை ஒருவர் பொருளாதார நெருக்கடியில் அவதிப்படுகிறார் என்று தெரிந்ததும் அவர் போட்டியில் பங்கேற்க உதவும் வகையில் ரூ.4.5 லட்சம் வழங்க உத்தரவி்ட்டுள்ளேன். மீரட் மாவட்ட ஆட்சியர் இதற்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்” என்றார்.

இதுகுறித்து இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (சாய்) இயக்குநர் ஜெனரல் நீலம் கபூர் கூறும்போது, “பிரியா சிங்குக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் சாய் அமைப்பு செய்யும். அவர் விரைவில் இந்திய அணியினருடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்வார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x