டெஸ்ட் தொடரை இழப்பது வேதனை; ஆனால் இது எங்களை மேம்படுத்தும் - கம்பீர்

கவுதம் கம்பீர்
கவுதம் கம்பீர்
Updated on
1 min read

மும்பை: உள்நாடு, வெளிநாடு என எங்கிருந்தாலும் டெஸ்ட் தொடரை இழப்பது நிச்சயம் வேதனை தரும்; ஆனால் அதுவே எங்களை மேம்படுத்தும் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த தொடரை 0-2 என்ற கணக்கில் இந்தியா இழந்துள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த நாட்டில் டெஸ்ட் தொடரை இந்தியா இழந்துள்ளது.

நாளை மும்பை நகரின் வான்கடேவில் தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியை குறிவைக்கும். இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்தது: “வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் தொடரை இழந்தது வேதனை தருகிறது. சமயங்களில் இது நல்லதும் கூட. ஏனெனில் இது எங்களை மேம்படுத்தும்.

சில நேரங்களில் தோல்வி வேதனை தரவில்லை என சிலர் சொல்வார்கள். ஆனால், தேசத்துக்காக விளையாடும் போது நிச்சயம் வேதனை இருக்கும். அப்படி சொல்வதில் எந்த தவறும் இல்லை. குறிப்பாக இளம் வீரர்கள் இதன் மூலம் மேம்படுவார்கள் என நான் கருதுகிறேன். சிறந்த கிரிக்கெட்டை விளையாட அவர்கள் நாளுக்கு நாள் ஆட்டத்தில் முன்னேற வேண்டும். விளையாட்டில் வெற்றியும், தோல்வியும் இருக்கும். நாம் முன்னேற வேண்டியது அவசியம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in