

கோயம்புத்தூர்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் சத்தீஸ்கர் அணி முதல் இன்னிங்ஸில் 500 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இந்த ஆட்டம் கோயம்புத்தூர் எஸ்என்ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சத்தீஸ்கர் அணி, முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் 2 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று 2-ம் நாள் ஆட்டத்தை அனுஜ் திவாரி 68, சஞ்சீத் தேசாய் 52 ரன்களுடன் தொடங்கினர். அனுஜ் திவாரி 84, சஞ்சீத் தேசாய் 82 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
அமன்தீப் கரே 4, ஏக்நாத் கேர்கர் 52, அஜய் மண்டல் 64, ஜிவேஷ் புட்டே 2, ரவி கிரண்ட் 15, ஆசிஷ் சவுகான் 2, ஷுபம் அகர்வால் 18 ரன்கள் சேர்த்தனர். தமிழக அணி தரப்பில் அஜித்ராம் 4, சித்தார்த் 3 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தமிழக அணியின் சுரேஷ் லோகேஷ்வர் 7 ரன்களில் வீழ்ந்தார். ஆட்டநேர இறுதியில் தமிழக அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் என். ஜெகதீசன் 6, எஸ். அஜித் ராம் 10 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.