Published : 22 Jun 2018 07:51 AM
Last Updated : 22 Jun 2018 07:51 AM

6 நாடுகள் பங்கேற்கும் கபடி தொடர்: இந்தியா - பாகிஸ்தான் கபடியில் இன்று மோதல்

இந்தியா, பாகிஸ்தான், கொரியா, ஈரான், அர்ஜென்டினா, கென்யா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கும் துபை மாஸ்டர்ஸ் கபடி தொடர் துபையில் இன்று தொடங்குகிறது. வரும் 30-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் கலந்து கொண்டுள்ள 6 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், கென்யா அணிகள் ஏ பிரிவிலும் ஈரான், கொரியா, அர்ஜென்டினா அணிகள் பி பிரிவிலும் இடம் பிடித்துள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா இரு முறை மோதும். இதில் இரு பிரிவிலும் முதல் இரு இடத்தை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். அரை இறுதி ஆட்டங்கள் 29-ம் தேதியும், இறுதிப் போட்டி 30-ம் தேதியும் நடைபெறுகிறது. தொடக்க நாளான இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதைத் தொடர்ந்து 9 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஈரான் அணி கொரியாவை சந்திக்கிறது.

இந்த கபடி தொடரானது வரும் ஆகஸ்ட் மாதம் ஜகார்த்தாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிக்கு இந்திய அணி சிறந்த முறையில் தயாராகுவதற்கு உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது. ஆசிய விளையாட்டில் 1990-ம் ஆண்டு கபடி விளையாட்டு சேர்க்கப்பட்டதில் இருந்து தொடர்ச்சியாக இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

துபை மாஸ்டர்ஸ் கபடி தொடரில் இந்திய அணி அஜெய் தாக்குர் தலைமையில் களறமிங்குகிறது. கடந்த ஓராண்டுக்கு முன்னர் ஈரானில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் கபடி தொடரில் அஜெய் தாக்குர் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தியிருந்தது. இதனால் மீண்டும் ஒருமுறை அந்த அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தை அணுகுகிறது. அஜெய் தாக்குருடன் இந்திய அணியில் ராகுல் சவுத்ரி, பர்தீப் நார்வால், ரோஹித் குமார், ரிஷாங் தேவதிகா, மோனு கோயத் உள்ளிட்ட தரம் வாய்ந்த ரைடர்களும் உள்ளனர்.

தீபக் ஹூடா, மஞ்ஜித் சில்லார், சுரேந்தர் நாடா, கிரிஷ் எர்னாக் என சிறந்த ஆல்ரவுண்டர்கள் மற்றும் டிபன்டர்களுடன் இந்திய அணி வலுவானதாக உள்ளது. பி பிரிவில் ஈரான் அணி வலுவாகத் திகழ்கிறது.

அந்த அணி 2004, 2007 மற்றும் 2016-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்களில் 2-வது இடம் பிடித்திருந்தது. இந்த 3 முறையும் ஈரான் அணி, இந்தியாவிடமே வீழ்ந்திருந்தது. இந்த தோல்விகளுக்கு இம்முறை ஈரான் அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x