Published : 28 Jun 2018 04:11 PM
Last Updated : 28 Jun 2018 04:11 PM

அடுத்த சுற்றில் தேறுமா பிரேசில்?: செர்பியா அச்சுறுத்தலை எளிதில் முறியடித்தாலும் சிக்கல்கள் உள்ளன

 

உலகக்கோப்பை 2018-ன் அடுத்த சுற்றுக்கு பிரேசில் 2-0 என்று செர்பியாவை வீழ்த்தி முன்னேறினாலும் பிரேசில் அணி நன்கு நிலையூன்றிய அணியாகத் தெரியவில்லை.

ஜோஸ் பவ்லோ பாலினியோ 36வது நிமிடத்தில் கோலாக மாற்ற 68வது நிமிடத்தில் தியாகோ சில்வா வெற்றியை இன்னொரு கோல் மூலம் உறுதி செய்தார். இறுதி 16 சுற்றில் ஒருவேளை மெக்சிகோவை வெளியேற்றி ஜெர்மனி வந்திருந்தால் 2014 உலகக்கோப்பை 7-1 கோல் பேய் பிரேசில் வீர்ர்களின் முதுக்குத்தண்டில் சில்லிட வைத்திருக்கும், ஆனால் ஜெர்மனி தென் கொரியாவுக்கே லாயக்கற்ற அணியாக வெளியேறியது.

ஆகவே இறுதி 16-ல் பிரேஸில் மெக்சிகோவைச் சந்திக்கிறது, மெக்சிகோ நேற்று ஸ்வீடனிடம் 3-0 என்று தோற்றாலும், அதில் ஒரு கோல் செல்ஃப் கோல் என்றாலும் அபாயகரமான அணியே, ஆனால் பிரேசிலுக்கு மிகவும் பழக்கப்பட்ட அணி என்பதால் பிரேசில் தைரியமாக இருக்கலாம், ஆனால இது மெக்சிகோ அணிக்கும் பொருந்தும்.

செர்பிய அணி வீரர்கள் கடைசியில் களைப்படைந்து ஆடினர், 60-லிருந்து 64-65 நிமிடங்கள் வரைக்கும் பிரேஸில் கோல் அருகே கடும் குடைச்சலைக் கொடுத்தனர் செர்பிய அணியினர் வேறு நல்ல ஸ்ட்ரைக்கர்கள் உள்ள அணியாக இருந்திருந்தால் 2 கோல்கள் விழுந்திருக்கும், ஆனால் பிரேசிலின் தடுப்பாட்டம் அந்தக் கட்டத்தில் சிறப்பாக இருந்தது.

 

உணர்ச்சிவயப்படும் பிரேசில் வீரர்களுக்கு களத்தில் அழுகை எந்த அளவுக்கு அனுமதிக்கப்படுகிறது என்பதையும், நெய்மரிடம் உலகக்கோப்பையில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட மாட்டாது என்றும் கூறிவிடுவது நல்லது.

2வது நிமிடத்திலேயே நடுக்களத்தில் பந்தை எடுத்துக் கொண்டு வேகம் காட்டினார். இரண்டு வீரர்களைக் கடந்து கூட்டினியோவை ஷாட்டுக்காக செட் அப் செய்தார். பாக்சின் ஓரத்திலிருந்து கூட்டினியோ அடித்தார், ஆனால் ஜீஸஸ் அதனை தெரியாமல் மறித்தார். 9வது நிமிடத்தில் மார்செலோவுக்கு காயம் ஏற்பட்டு வெளியேறினார், பிரேசில் பின்னடைவு கண்டது. 34வது நிமிடத்தில் செர்பிய வீரர் மிட்ரோவிச் செய்த கோல் நோக்கிய முயற்சி கோல்வலைக்கு மேலே சென்றது.

அப்போதுதான் பிரேசிலின் எதிர்த்தாக்குதலில் பாலினியோ முதல் கோலை அடித்தார். கூட்டினியோ அருமையாக பந்தை எடுத்து வந்து பாலினியோவை செட் செய்ய அவர் செய்த அருமையான, துல்லியமான பாஸை பாலினியோ கொஞ்சம் பவுன்ஸ் ஆனாலும் முன்னேறி வந்த கோல்கீப்பரைத் தாண்டி கோலுக்குள் திணித்தார். 1-0.

பிரேசில் சில நேரங்களில் நன்றாக ஆடியது, சில நேரங்களில் தொழில் நேர்த்தியில்லாமல் ஆடியது, ஆனால் பாஸ்களின் அழகு என்றால் அது பிரேசில்தான். அது நேற்றும் தொடர்ந்த்து. நெய்மர் அதிகம் பந்துடன் டச்சில் இருந்தார், 7 முறை கோல் நோக்கி ஷாட் அடித்தார், ஆனால் வேறொரு பிரேசில் அணியாக இருந்திருந்தால், நெய்மரே உடற்தகுதியுடன் இருந்திருந்தால் 2-3 கோல்களை அவரே அடித்திருப்பார். ஆனாலும் நெய்மரின் நாடகீயம் தொடர்ந்தது. லேசாக அவரைச் சீண்டியதற்கு சைடு லைன் அருகே ஒன்று அல்லது 2 கரணங்கள்தான் அந்த ஃபவுலுக்குச் சாத்தியம், ஆனால் அவர் 8 கரணங்கள் அடித்து பெரிய நாடகமாடினார், ஆனால் இப்போது உலகம் புரிந்து கொண்டுவிட்டது நெய்மரை. பிரேசில் நிர்வாகம்தான் அவரின் நாடகீய சேஷ்டைகளைக் கட்டுப்படுத்தப் பணிக்க வேண்டும். இது அவரைப் பலவீனமாக்குவதோடு அணியையும் பலவீனமாக்குகிறது.

பிரேசிலின் பிரச்சினைகளும் வலுவும்:

பிரேசிலை இதுவரை பார்த்த அளவில் சுவிஸ் அணியுடன் ட்ரா, பிறகு கோஸ்டா ரிகாவுக்கு எதிரான வெற்றி, நேற்று செர்பியாவுக்கு எதிரான வெற்றி ஆகிய 3 போட்டிகளையும் பார்த்த பிறகு மையக்களத்தில் நிறைய இடைவெளிகள் உள்ளது தெரிந்தது. இதேபோன்ற பலவீனத்தை ஜெர்மனியிடம் மெக்சிகோவும் நேற்று தென் கொரியாவும் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் அந்த அணி அடுத்த நாக் அவுட்டில் மெக்சிகோவைத்தான் சந்திக்கிறது.

 

நெய்மர், கேப்ரியல் ஜீஸஸ், வில்லியன், ராபர்டோ ஃபெர்மினோ, மார்செலோ என்று தாக்குதல் தெரிவு நிறைய பிரேசிலிடம் உள்ளது. பிரேசில் வீரர்கள் பந்தை கிராஸ் செய்வதில் சற்றே சோடைபோயுள்ளனர். அணியின் பயிற்சியாளர் டீட்டே முக்கோண அமைப்பில் பந்தை ஷார்ட் பாஸ்களாகக் கொண்டு செல்ல பணித்துள்ளார். பிரேசில் அணியின் காலங்க்காலமான அச்சுறுத்தல் இடது புறத்தாக்குதல்தான் ஆனால் அது தற்போது சற்றே பலவீனமடைந்துள்ளது. இடது புறம் மார்செலோ டைட்டாக ஆடுவதில்லை. அதே போல் மிராண்டா மற்றும் பாலினியோ தாக்குதல் நிலையிலிருந்து அபாயகர வீரர்கள். நெய்மர், கூட்டினியோ ஏற்கெனவே சில மின்னல்களைக் காட்டியுள்ளனர், ஆனாலும் ஆதிக்கம் செலுத்தும் ஒரு அணிச்சேர்க்கையோ, உத்தியோ, இன்னும் பிரேசிலுக்குக் கைகூடவில்லை.

பயிற்சியாளர் டீட்டேவின் அபார பயிற்சி மற்றும் உத்தியைச் சரியாகக் கடைபிடித்தால் ஒருவேளை பிரேசில் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பே பிரகாசமாக உள்ளது, இருந்தாலும் நம்பிக்கையுடன் கூற முடியவில்லை, எப்போது வேண்டுமானாலும் அதிர்ச்சி ஏற்படலாம் என்ற நிலையே உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x