‘மீண்டும் ஆட தயார்’ - இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட விரும்பும் வார்னர்

டேவிட் வார்னர்
டேவிட் வார்னர்
Updated on
1 min read

சிட்னி: இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் ஓய்வுக்கு விடை கொடுத்து ஆஸ்திரேலிய அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களமாட தான் தயார் என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

37 வயதான டேவிட் வார்னர், கடந்த ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தார். அதுவே அவரது கடைசி டெஸ்ட் போட்டியாக இருந்தது.

தொடக்க ஆட்டக்காரரான அவரது ஓய்வுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் ஓப்பனர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அவர் விட்டு சென்ற வெற்றிடத்தை நிரப்ப அனுபவ வீரர் ஸ்டீவ் ஸ்மித் முன்வந்தார். இருப்பினும் ஓப்பனராக அவரது செயல்பாடு சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை. இந்நிலையில், சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் ஓப்பனர் குறித்த கேள்வி எழுந்துள்ளது.

“நான் எப்போதும் தயாராக இருப்பேன். சரியான காரணங்களுக்காக நான் ஓய்வு பெற்றேன். நான் எனது விளையாட்டு கேரியரை உரிய நேரத்தில் முடித்துள்ளேன். அதே நேரத்தில் அணிக்கு நான் தேவைப்படும் பட்சத்தில் களமாட தயாராக உள்ளேன். அதற்கு தயாராகவும், எனது ஃபிட்னெஸ்ஸுக்காகவும் ஷெஃபீல்ட் ஷீல்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளேன். ஆஸி. அணிக்கு மீண்டும் ஓப்பனராக நான் ஆட தயார்” என வார்னர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த 2011 முதல் 2024 ஜனவரி வரையில் 112 டெஸ்ட் போட்டிகளில் வார்னர் விளையாடி உள்ளார். அதன் மூலம் 8786 ரன்களை எடுத்துள்ளார். 26 சதங்கள் பதிவு செய்துள்ளார். இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 21 போட்டிகளில் விளையாடி, 1218 ரன்கள் எடுத்துள்ளார். 4 சதம், 3 அரை சதம் இதில் அடங்கும்.

காயம் காரணமாக அடுத்த ஆறு மாத காலம் கிரிக்கெட் விளையாட முடியாத நிலையில் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரர் தலைவலியும் ஆஸி. அணிக்கு உள்ளது. அது அனைத்துக்கும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக தீர்வு காண வேண்டிய அழுத்தத்தை அந்த அணி எதிர்கொண்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in