

என்னவோ உலகின் டாப் 8 அணிகள்தான் தரமான கிரிக்கெட்டை ஆடுவது போலவும் அசோசியேட் கிரிக்கெட் அணிகள் தரக்குறைவான கிரிக்கெட்டை ஆடுவது போலவும் 10 அணி உலகக்கோப்பை கிரிக்கெட் பற்றி ஐசிசி செயலதிகாரி டேவ் ரிச்சர்ட்ஸன் பேசினார்.
இன்று ஸ்காட்லாந்து இங்கிலாந்தை வீழ்த்த முடிகிறது, ஆனால் இவர்கள் உயர்த்திப்பிடிக்கும் டாப் 8 அணிகளில் ஒன்றான இலங்கை ஜிம்பாப்வே, வங்கதேசத்திடம் தோல்வி தழுவுகிறது.
ஆகவே, தரநிலை என்பது கிரிக்கெட்டை வைத்து முடிவு செய்யப்படுவதில்லை, அந்தந்த அணிக்கு இருக்கும் டிவி ரேட்டிங், ஸ்பான்சர் பலம், பணபலம், வர்த்தக வீச்சு ஆகியவற்றை கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.
இந்நிலையில் சுனில் கவாஸ்கர் கூறும்போது, அயர்லாந்து, ஸ்காட்லாந்து போன்ற அசோசியேட் அணிகள் தகுதிச்சுற்றின் மூலம் உலகக்கோப்பைக்குத் தகுதி பெறவில்லையெனில் அந்த அணிகள் உலகக்கோப்பையில் விளையாட தகுதியற்ற அணிகளே என்று கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது: “இங்கிலாந்தை ஸ்காட்லாந்து திடீரென வீழ்த்தப்போக, உடனே அடுத்த உலகக்கோப்பையில் 10 அணிகள்தான் என்ற குரல்கள் பெருகுகின்றன. இப்படிக் கத்துபவர்கள் ஒன்றை மறக்கின்றனர், அசோசியேட் அணிகளுக்கென தகுதிச்சுற்றுப் போட்டிகள் உள்ளன. இதில் ஆப்கானிஸ்தான், மே.இ.தீவுகள் தகுதி பெற்றன.
அயர்லாந்து ஸ்காட்லாந்து வட்டாரங்களிலிருந்துதான் ஆரவாரக் கூச்சல் எழுகின்றன. அசோசியேட் தகுதிச் சுற்றில் வெற்றி பெற முடியாத போது உலகக்கோப்பையில் எப்படி வெற்றி பெற முடியும்? துணைக்கண்ட அணிகள் உலகக்கோப்பைக் கால்பந்தில் தாங்களும் இடம்பெற வேண்டும் என்று கேட்பது போல் உள்ளது இது. எதார்த்த நிலையை உணருங்கள். ஒரு போட்டியில் பெரிய அணியை வீழ்த்திவிட்டால் உலகக்கோப்பைக்கான தகுதி வந்துவிடுமா?” என்று காட்டமாகக் கேட்டுள்ளார்.
2019 உலகக்கோப்பைக்கு 10 அணிகள்தான் என்று ஐசிசி அறிவித்த போது அசோசியேட் அணிகளிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அவரவர்கள் நாட்டில் வாழ்க்கையைப் பணயம் வைத்து தங்கள் அணியை உலகக்கோப்பையில் ஆடச்செய்ய வேண்டும் என்று பலரும் பாடுபடுகின்றனர், இவர்கள் சும்மாவாவது இடது கையில் இவர்களைத் தள்ளி விடுவது ஐசிசி போன்ற சர்வதேச கிரிகெட் கவுன்சிலுக்கு அழகல்ல, பிறகு என்ன ‘சர்வதேச’ என்ற அடைமொழி? 10 அணிகள் கிரிக்கெட் கவுன்சில் என்று மாற்ற வேண்டியதுதானே?
சரி கால்பந்து ஒப்பீட்டைச் செய்யும் கவாஸ்கருக்கு ஒன்று தெரியவில்லை, அங்கு அனைத்து அணிகளும் தகுதிச் சுற்றுப் போட்டிகளி நிரூபித்துத்தான் வர வேண்டும், கடந்த முறை சாம்பியன் கூட. அதனால்தான் இத்தாலி, நெதர்லாந்து போன்ற டாப் அணிகள் கூட தகுதி பெற முடியாமல் போய் விடுகிறது.
எதற்கெடுத்தாலும் கால்பந்து மாதிரியைக் கடைபிடிக்கும் ஐசிசி ஏன் அனைத்து அணிகளும் தகுதிச்சுற்றில் ஆட வேண்டும் என்ற விதிமுறையைக் கொண்டு வர வேண்டியதுதானே? கொண்டுவந்தால் பணமழை இந்திய அணியே தகுதி பெறப் போராடினால் அது எதிர்மறை விளம்பரம் ஆகிவிடாதா? ஆகவே கவாஸ்கர் கால்பந்து உதாரணம் அளிக்கும் போது அதில் உள்ள சிக்கல்களை உணர்ந்தவராகப் பேச வேண்டும்.
மேலும் அன்று இப்படி நினைத்திருந்தால், 1975, 1979 உலகக்கோப்பையை வைத்து 1983-ல் இந்திய அணி பங்கேற்க தகுதியில்லாத அணி என்று முடிவு கட்டியிருந்தால் நாம் இன்று இருமுறை உலகக்கோப்பையை வென்ற அணி என்று மார்த்தட்ட முடியுமா?
இன்றைய தேதியில் ஆஸ்திரேலியா அணியே ஒருநாள் தரவரிசையில் 34 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கீழே சென்று 6ம் நிலையில் உள்ளது. ஆகவே கிரிக்கெட்தான் பேச வேண்டுமே தவிர பணபல பவர் ஹவுஸ்களாக விளங்கும் அணிகள்தான் விளையாட வேண்டுமென்றால் அதற்கு ஐசிசி கோப்பை என்று பெயர் வைக்க வேண்டியதுதானே? ஏன் உலகக்கோப்பை?