

சென்னை: எதிர்வரும் ‘காமன்வெல்த் போட்டி - 2026’-ல் இருந்து ஹாக்கி, பாட்மிண்டன், மல்யுத்தம், கிரிக்கெட், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. இது விளையாட்டு உலகில் அதிரிச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டின் விகடோரியாவில் 2026-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டி நடைபெற இருந்தது. இந்நிலையில், நிதி நெருக்கடி காரணமாக அது தற்போது ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகருக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சூழலில் முக்கிய விளையாட்டுகள் நீக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த விளையாட்டு நிகழ்வை பட்ஜெட்டுக்குள் சிக்கனமாக நடத்தும் வகையில் சில விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. நான்கு இடங்களில் மட்டுமே காமன்வெல்த் போட்டி - 2026 நடத்தப்படுகிறது. அதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
கிளாஸ்கோவில் 2026-ம் ஆண்டின் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை காமன்வெல்த் போட்டி நடைபெறுகிறது. ஹாக்கி, பாட்மிண்டன், மல்யுத்தம், கிரிக்கெட், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், டிரையத்லான், ஸ்குவாஷ் உள்ளிட்ட போட்டிகள் பட்ஜெட் காரணமாக போட்டிக்கான விளையாட்டு பட்டியலியில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு எதிர்வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க வாய்ப்பை பெரிய அளவில் பாதிக்க செய்யும் வகையில் அமைந்துள்ளது.