

பெங்களூரு: நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவனில் ஷுப்மன் கில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியென்றால் சர்பராஸ் கான் அல்லது கே.எல்.ராகுல் ஆகிய இருவரில் ஒருவருக்குதான் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கும். இந்தச் சூழலில் ஆடும் லெவனில் ராகுலை தேர்வு செய்வேன் என இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் சதம் கண்டார். ராகுல் ரன் சேர்க்க தடுமாறினார். அவரை நீக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் இந்திய அணியின் தோல்விக்கு பிறகு சொல்லி இருந்தனர். “அடுத்த டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனில் ஷுப்மன் கில் இடம் பெறும் பட்சத்தில் சர்பராஸ் கான் அல்லது கே.எல்.ராகுலை வைத்து ஆடுவதா என்று கேள்வி எழவே செய்கிறது. நான் ராகுலை வைத்து ஆடுவேன். அணி அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை வைத்து இதனை சொல்கிறேன். இருந்தாலும் இது அணி நிர்வாகத்தின் முடிவை பொறுத்தே அமையும்.
பெங்களூரு போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் ராகுலை மூன்றாவது இடத்தில் ஆட வைத்திருக்கலாம். ஆனால், அணி நிர்வாகம் அதனை மாற்ற விரும்பவில்லை. அதனால் அவர் ஆறாவது பேட்ஸ்மேனாக களம் கண்டார். அவர் மீது அதீத நெருக்கடி உள்ளது. இருப்பினும் அவருடனே நான் ஆட விரும்புவேன். இதே போல பந்து வீச்சில் முகமது சிராஜ் அல்லது ஆகாஷ் தீப் என யாரை தேர்வு செய்வது என்ற குழப்பம் இருக்கிறது” என பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார்.
வரும் வெள்ளிக்கிழமை புனேவில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாட உள்ளது. இந்த சூழலில் இந்திய அணியில் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.