

ராஜ்கோட்: நடப்பு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் சீசனில் இரட்டை சதம் விளாசியுள்ளார் இந்திய வீரர் புஜாரா. இது முதல் தர கிரிக்கெட்டில் அவரது 18-வது இரட்டை சதமாக அமைந்துள்ளது.
36 வயதான புஜாரா, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பினை பெறாத சூழலிலும் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். ரஞ்சி கோப்பை 2024-25 கிரிக்கெட் சீசனில் சவுராஷ்டிரா அணிக்காக அவர் விளையாடி வருகிறார். சத்தீஸ்கர் அணிக்கு எதிரான போட்டியில் 383 பந்துகளை எதிர்கொண்டு 234 ரன்களை அவர் எடுத்தார். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைத்துள்ளார். இது முதல் தர கிரிக்கெட்டில் புஜாராவின் 18-வது சதமாகும். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் (ஆல்-டைம்) அதிக இரட்டை சதம் பதிவு செய்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்துக்கு புஜாரா முன்னேறியுள்ளார்.
இந்திய அளவில் இந்த பார்மெட்டில் அதிக சதம் மற்றும் 21,000+ ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் சச்சின், கவாஸ்கர், திராவிட் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் புஜாரா (66 சதங்கள்) உள்ளார். இதன் மூலம் சதங்களில் மேற்கு இந்தியத் தீவுகளின் முன்னாள் வீரர் பிரையன் லாராவை (65) முந்தியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் ஸ்பெஷலிஸ்ட்: கடந்த 2005 முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். பின்னர் 2010-ல் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள புஜாரா, 7195 ரன்கள் குவித்துள்ளார். 19 சதங்கள் மற்றும் 35 அரை சதங்கள் பதிவு செய்துள்ளார். கடைசியாக கடந்த 2023-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருந்தார். அதன் பின்னர் அணியில் அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட், இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.