பயிற்சியாளர் ஜேசன் கில்லஸ்பிக்கு இதுதான் மரியாதையா? - அறிவுரையைப் புறக்கணித்த பாகிஸ்தான் வாரியம்

பயிற்சியாளர் ஜேசன் கில்லஸ்பிக்கு இதுதான் மரியாதையா? - அறிவுரையைப் புறக்கணித்த பாகிஸ்தான் வாரியம்
Updated on
1 min read

முல்டான் டெஸ்ட் போட்டியில் தோற்க முடியாத இடத்திலிருந்து தோற்றுக் காட்டிய பாகிஸ்தான் அணியிலிருந்து பாபர் அஸம், ஷாஹின் ஷா அஃப்ரீடி, நசீம் ஷா ஆகிய சூப்பர் ஸ்டார் வீரர்கள் நீக்கப்பட்டதில் தலைமைப் பயிற்சியாளர ஜேசன் கில்லஸ்பி அதிருப்தி அடைந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இவர்களை நீக்குவதற்குக் காரணமாக, ‘தற்போதைய அவர்களது ஆட்டம் மற்றும் உடல்தகுதி’ கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டது என்று தெரிவித்துள்ளது. வீரர்களை ஆதரவளித்து ஃபார்முக்குக் கொண்டு வர வேண்டுமே தவிர இப்படி அதிரடியாக நீக்கக் கூடாது என்று ஜேசன் கில்லஸ்பி ஒரு புறமும் கேப்டன் ஷான் மசூத் ஒரு புறமும் வலியுறுத்தியதாகவும், ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தலைமைப் பயிற்சியாளரின் அறிவுரைக்குச் செவிசாய்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த செலக்‌ஷன் கமிட்டியும் புதிது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செலக்‌ஷன் கமிட்டி உறுப்பினரான முன்னாள் ஹாட்ரிக் புகழ் ஆகிப் ஜாவேத், இவர்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இடைவேளைத் தேவைப்படுகிறது என்றும் சில வேளைகளில் இத்தகைய இடைவேளை அவர்கள் ஃபார்முக்கும் நல்ல மனநிலைக்குத் திரும்புவதற்கும் உதவவே செய்யும் என்று கூறியுள்ளார்.

பாபர் அஸம் போன்ற வீரரை டிராப் செய்யக் கூடாது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு முறையே வீரர்களை அழிக்கும் தன்மை கொண்டது என்பதுதான் அதன் சமீபத்திய வரலாறாக இருந்து வருகிறது. ஷாஹின் ஷா அஃப்ரீடி பூச்சாண்டி எல்லாம் முடிந்து விட்டது. அவர் 130 கி.மீ வேகம் வீசத் திணறுகிறார். நசீம் ஷா, அஃப்ரீடி அளவுக்கு தேய்மானம் அடைந்து விடவில்லை என்றாலும் அவரது பந்துவீச்சிலும் பேட்டர்களை ஊடுருவிச்செல்லும் பந்துகள் அறவே இல்லாமல் போனதும் அவர் நீக்கத்திற்கு முக்கியக் காரணம் என்று தெரிகிறது.

தலைமைப் பயிற்சியாளர் வாய்ப்புக் கொடுக்கலாம், மேலே கொண்டு வருவோம் என்று உத்தரவாதம் கொடுக்கும் போது புதிய வீரர்களை அவர் தலையில் கட்டுவது மீண்டும் ஒரு எதிர்மறைத் தாக்கத்தையே ஏற்படுத்தும் வாய்ப்புகளே அதிகம்.

பாகிஸ்தான் பவுலர்கள், பொதுவாகவே அணியும் அணி நிர்வாகவும் வெற்றி என்றாலும் தோல்வி என்றாலும் ஓவராக உணர்ச்சி வயப்படுகிறார்கள், இது உதவாது என்று கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார். மேலும் பயிற்சி என்ற பெயரில் தங்கள் உடலை களைப்படையச் செய்யும் அளவுக்கு வருத்திக் கொள்கிறார்கள், சுத்தப் பைத்தியக்காரத்தனம் என்று சாடியுள்ளார் கெவின் பீட்டர்சன்.

பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தினுள், அணிக்குள் ஏகப்பட்ட பிரச்சனைகள் உள்ளன, இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டால்தான், ஐசிசி-பிசிசிஐ கூட்டணியின் தாக்கத்திற்கு எதிராகவும் போராட முடியும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in