

இந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி புதிய எழுச்சியுடன் விளையாடும் என்று அந்த அணியின் ஆலோசகர் ஸ்ரீகாந்த், பயற்சியாளரும், முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருமான டாம் மோடி ஆகியோர் கூறியுள்ளனர்.
ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 16-ம் தேதி அபுதாபியில் தொடங்கவுள்ளன. இந்நிலையில் ஹைதராபாதில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீகாந்த், டாம் மோடி ஆகியோர் கூறியது:
கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் முறையாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்றது. முதல் போட்டியிலேயே அணி சிறப்பாக செயல்பட்டு பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறியது. இம்முறையும் அதே நம்பிக்கையுடன் களமிறங்குகிறோம். பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்து நிலைகளிலும் எங்கள் அணி சமபலத்துடன் திகழ்கிறது.
போட்டிக்காக முழு அளவில் தயாராக இருக்கிறோம். எங்கள் அணியில் ஷிகர் தவண், இஷாந்த் சர்மா, கரண் சர்மா ஆகிய வீரர்கள் உள்ளனர். பந்து வீச்சில் அமித் மிஸ்ரா, டேல் ஸ்டெயின், டேரன் சமி ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.
இந்த ஐபிஎல் போட்டியில் எங்கள் அணி மட்டுமல்லாது அனைத்து அணிகளுமே சிறப்பான திட்டமிடலுடன் களமிறங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த சில ஆண்டுகள் நடைபெற்ற போட்டிகளில் சில அணிகள் பலவீனமானவை என்பது அடையாளம் காணப்பட்டன. ஆனால் இப்போது உள்ள 8 அணிகளுமே சமபலம் வாய்ந்தவை. எனவே அனைத்து போட்டிகளுமே சவால் மிக்கதாக இருக்கும் என்றனர்.
முதலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும், பின்னர் இந்தியாவிலும் போட்டி நடைபெறுவதால் வீரர்கள் சிரமத்துக்கு உள்ளாவார்களா என்ற கேள்விக்கு, போட்டி நடைபெறும் நாள்களில் இரு நாடுகளிலுமே ஏறக்குறைய ஒரே காலநிலைதான் நீடிக்கும். எனவே பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இருக்காது. அனைத்து வீரர்களுமே பல்வேறு நாடுகளில் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள்தான் என்று தெரிவித்தனர்.