

ஒரு கேப்டனாக தோனி தன்னை நேர்மையாக மறுமதிப்பீடு செய்து கொள்வது அவசியம் என்று முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
அயல்நாடுகளில் தோனியின் பேட்டிங் முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால் கேப்டன்சியில் அவர் தன்னை நேர்மையாக மறுமதிப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆங்கில இணையதளம் ஒன்றில் எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது:
"தோனி தன்னைக் கூர்மையாக அவதானிக்கும் நேரம் வந்து விட்டது. அவரது பேட்டிங் அயல்நாடுகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால் அவரது கேப்டன்சி நிச்சயம் முன்னேற வேண்டும். அவர் இதில் தன்னை நேர்மையாக மறுமதிப்பீடு செய்து கொள்வது அவசியம்.
பலர் அவரை விமர்சனம் செய்கின்றனர். சிலர் அவர் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்குகின்றனர். அவர்கள் அனைவரும் நல்லதுக்குத்தான் கூறுகின்றனர். அவரது உத்திகளும் சூழ்நிலைக்குத் தக்கவாறு தன்னை தகவமைத்துக் கொள்வதிலும் தோனியிடம் குறைபாடு உள்ளது.
அவர் இன்னும் சாதுரியத்துடனும், கற்பனையுடனும் செயல்படுவது அவசியம். டெஸ்ட் போட்டிகளில் நல்ல கேப்டனாக அவர் வரவேண்டுமெனில் விரைவு முடிவுகளை எடுக்க வேண்டும்.
ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் சிறப்பாக செயல்படுகிறார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சாளர்கள் திணறும்போது இவரது கள அமைப்புகள் எந்த விதத்திலும் அவர்களுக்கு உதவுவதாக இல்லை.
அயல்நாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டை எதிர்கொள்வது எப்படி என்பதை அறிய தோனி வழிமுறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் கடந்த 4 ஆண்டுகளாக அவரது கேப்டன்சி நன்றாக இல்லை.
இன்னும் 2 மாதங்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. அங்கு இங்கிலாந்தை விடவும் கடினமாக இருக்கும், அதற்குள் அவர் தன்னை சுயபரிசீலனை செய்து சிறந்த வழிகளுக்குத் திரும்ப வேண்டும்” என்கிறார் கங்குலி.