Published : 05 Jun 2018 04:29 PM
Last Updated : 05 Jun 2018 04:29 PM

ஏ.பி.டிவில்லியர்ஸ் வைத்திருக்கும் ஓர் அரிய, தனித்துவ டெஸ்ட் சாதனை

ஏ.பி.டிவில்லியர்ஸ் வைத்திருக்கும் ஓர் அரிய டெஸ்ட் சாதனை

சாதனைகள் ஒருவரின் திறமையை அளக்க சரியான அளவுகோல் இல்லை என்று கூறப்படுவதுண்டு, ஏ.பி.டிவில்லியர்ஸ் போன்றவர்கள் டான் பிராட்மேன், சச்சின் டெண்டுல்கர் போன்று சாதனைகளை நிகழ்த்தாவிட்டாலும் அவரது பன்முகத்திறமைக்கு இன்று நிகரான வீரர்கள் ஒருவரும் இல்லை என்றே கூற வேண்டும்.

ஓய்வு பெறும் வரையும் கூட திகைக்க வைக்கும் கேட்ச்கள், பீல்டிங்குகளைச் செய்துள்ளார், தன் அணிக்காக விக்கெட் கீப்பிங்கில் பிரமாதமான சில அவுட்களைச் செய்து பெரிய அளவில் பங்களிப்பு செய்துள்ளார், உண்மையில் பவுலிங் போடவில்லையே தவிர ஏ.பி.டிவில்லியர்சும் ஒரு ஆல்ரவுண்டர்தான்.

அவர் சாதனைகளில் மிகவும் தனித்துவமான ஒன்று விக்கெட் கீப்பிங்கில்தான் அவர் செய்துள்ளார். ஆடம் ,கில்கிறிஸ்ட், தோனி, சங்கக்காரா, மார்க் பவுச்சர் உள்ளிட்டோருக்கும் இந்த ஒரு சாதனை வாய்க்கவில்லை, ஆனால் ஏ.பி.டிவில்லியர்ஸுக்கு வாய்த்தது.

அந்த விக்கெட் கீப்பிங் சாதனை இதுதான்:

ஜொஹான்னஸ்பர்கில் 2013-ம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஏ.பி.டிவில்லியர்ஸ் இரண்டாவது இன்னிங்சில் 117 பந்துகளில் 103 நாட் அவுட் என்று சதம் எடுத்தார். இதே போட்டியில் முதல் இன்னிங்சில் விக்கெட் கீப்பராக 6 கேட்ச்களையும், 2வது இன்னிங்சில் 5 கேட்ச்களையும் பிடித்து ஒரே டெஸ்ட் போட்டியில் 11 பேரை ஆட்டமிழக்கச் செய்ததுடன் சதமும் கண்டு ஒரு தனித்துவ சாதனையைப் படைத்தார். 11 பேரை ஆட்டமிழக்கச் செய்த விக்கெட் கீப்பர் என்ற வகையில் ஜாக் ரஸ்ஸல் சாதனையைச் சமன் செய்த டிவில்லியர்ஸ். அதே போட்டியில் சதம் எடுத்தது தனித்துவமான விக்கெட் கீப்பிங்/பேட்டிங் சாதனையாக இன்று வரை உள்ளது.

இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் தன் முதல் இன்னிங்ஸில் இறங்கி டேல் ஸ்டெய்னின் பந்தை ஒன்றுமே செய்ய முடியாமல் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மொத்தம் 29 ஓவர்கள்தான் தாக்குப்பிடித்தது பாகிஸ்தான். இதில் டேல் ஸ்டெய்ன் 8.1 ஓவர் 6 மெய்டன் 8 ரன்களுக்கு 6 விக்கெட். பாகிஸ்தானுக்கு மிஸ்பா தலைமையில் மிகப்பெரிய உதையாக அமைந்தது இந்தப் போட்டி.

2வது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா டிவில்லியர்ஸ் சத நாட் அவுட்டுடன் 275/3 என்று டிக்ளேர் செய்ய பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்கு 480 ரன்கள். 268 ரன்களுக்குப் பாகிஸ்தான் சுருண்டது, டேல்ஸ்டெய்ன் மீண்டும் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்த விக்கெட் கீப்பிங் சாதனையை இப்போது ஆடும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மென்கள் யாரேனும் முறியடிப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x