இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை: வெற்றி நெருக்கடியில் இந்திய மகளிர் அணி

இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை: வெற்றி நெருக்கடியில் இந்திய மகளிர் அணி
Updated on
1 min read

துபாய்: ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐசிசி மகளிர் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் 105 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 18.5 ஓவரில்தான் வெற்றி கண்டிருந்தது.

இந்த வெற்றியால் 2 புள்ளிகளுடன் பட்டியலில் தனது பிரிவில் 4-வது இடத்தில் உள்ள இந்திய அணி இன்று இலங்கையை எதிர்கொள்கிறது. இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடமும், அடுத்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவிடமும் தோல்வி அடைந்திருந்தது. இரு தோல்விகளால் அந்த அணி புள்ளிகளை ஏதும் பெறாமல் கடைசி இடத்தில் உள்ளது.

இந்தத் தொடரில் இந்திய அணியின் பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பானதாக அமையவில்லை. தொடக்க வீராங்கனையான ஷபாலி வர்மா முதல் ஆட்டத்தில் 2 ரன்களில் வெளியேறி நிலையில் அடுத்த ஆட்டத்தில் 32 ரன்களை சேர்த்து ஆறுதல் அளித்தார். மற்றொரு தொடங்கக வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா இருஆட்டங்களிலும் கூட்டாக 19 ரன்களே சேர்த்தார்.

அரை இறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி கட்டயாம் வெற்றி பெற்றாக வேண்டும். இதனால் ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா ஜோடி சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுப்பதில் கவனம் செலுத்தக்கூடும். ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் ஆகியோரும் பொறுப்புடன் விளையாடும் பட்சத்தில் வெற்றியை வசப்படுத்தலாம்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 29 ரன்கள் சேர்த்த ஹர்மன்பிரீத் கவுருக்கு கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர், இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவது சந்தேகம் என்றே கூறப்படுகிறது.

இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி பெரிய அளவிலான வெற்றியை வசப்படுத்தினால் மட்டுமே நிகர ரன் ரேட்டை அதிகரிக்க முடியும். தற்போது இந்திய அணியின் நிகர ரன் ரேட் -1.217 ஆக இருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை அணி அதிர்ச்சி கொடுத்திருந்தது. இதனால் அந்த அணி இம்முறையும் சவால்தரக்கூடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in