

முல்தான்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 556 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. சல்மான் ஆகா சதம் விளாசினார்.
முல்தான் நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டத்தில் 86 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 328 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷான் மசூத் 151, அப்துல்லா ஷபிக் 102 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
சவுத் ஷகீல் 35, நசீம் ஷா ரன் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 149 ஓவர்களில் 556 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
நசீம் ஷா 33 ரன்களில் பிரைடன் கார்ஸ் பந்தில் வெளியேறினார். சவுத் ஷகீல் 177 பந்துகளில், 8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் சேர்த் நிலையில் ஷோயிப் பஷிர் பந்தில் ஆட்டமிழந்தார். தனது 3-வது சதத்தை விளாசிய சல்மான் ஆகா 119 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முகமது ரிஸ்வான் 0, அமீர் ஜமால் 7, ஷாகீன் ஷா அப்ரிடி 26, அப்ரார் அகமது 3 ரன்களில் நடையை கட்டினர்.
இங்கிலாந்து அணி தரப்பில் ஜேக் லீச் 3 விக்கெட்களை வீழ்த்தினார். கஸ் அட்கின்சன், பிரைடன்கார்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்தது.
கேப்டன் ஆலி போப் ரன் ஏதும் எடுக்காத நிலையில் நசீம் ஷா பந்தில் ஆட்டமிழந்தார். ஸாக் கிராவ்லி 64 பந்துகளில், 11 பவுண்டரிகளுடன் 64 ரன்களும், ஜோ ரூட் 32 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். கைவசம் 9 விக்கெட்கள் இருக்க 460 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி.