Published : 16 Jun 2018 09:13 AM
Last Updated : 16 Jun 2018 09:13 AM

ஆப்கானிஸ்தானை சுருட்டி வீசியது இந்தியா: இன்னிங்ஸ், 262 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 78 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 347 ரன்கள் குவித்திருந்தது. ஷிகர் தவண் 107, முரளி விஜய் 105 ரன்கள் விளாசினர். கே.எல்.ராகுல் 54, புஜாரா 35, கேப்டன் ரஹானே 10, தினேஷ் கார்த்திக் 4 ரன்களில் ஆட்டமிழந்திருந்தனர்.

ஹர்திக் பாண்டியா 10, அஸ்வின் 7 ரன்களுடன் நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடினார்கள். அஸ்வின் 18 ரன்களிலும், அவரை தொடர்ந்து ஜடேஜா 20 ரன்களிலும் வெளியேறினர். சீராக ரன்கள் சேர்த்த ஹர்திக் பாண்டியா 94 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்த நிலையில் வாஃபாதர் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசி வீரராக இஷாந்த் சர்மா 8 ரன்னில் நடையை கட்டினார். முடிவில் இந்திய அணி முதல் இன்னிங் ஸில் 104.5 ஓவர்களில் 474 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களை யும் இழந்தது- ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் யாமின் அகமதுஸாய் 3 விக்கெட்களும் வாஃபாதர், ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்களும் கைப் பற்றினர்.

இதையடுத்து பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 27.5 ஓவர்களில் 109 ரன்களுக்கு சுருண்டு பாலோ-ஆன் ஆனது. அதிகபட்சமாக முகது நபி 24, முஜீப் உர் ரஹ்மான் 15, ரஹமத் ஷா 14, முகமது ஷஹ்சாத் 14 ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன் கள் யாரும் இரட்டை இலக்க ரன்னை தாண்டவில்லை. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்களும் ஜடேஜா, இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர். பாலோ-ஆன் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 365 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது. முக மது ஷஹ்சாத் 13, ஜாவித் அகமதி 3, ரஹ்மத் ஷா 4, முகமது நபி 0 ரன்களில் வெளியேற 24 ரன்களுக்கு 4 விக்கெட்களை பறிகொடுத்த ஆப்கானிஸ்தான் அணி அதன் பின்னர் மீளவே இல்லை.

ஹஸ்மதுல்லா ஷாகிதி மட்டும் தாக்குப்பிடித்து விளையாட மறுமுனையில் சீராக விக்கெட் சரிந்தது. கேப்டன் அஸ்கார் ஸ்டானிஸ்காய் 25, அப்ஸார் ஸாஷாய் 1, ரஷித் கான் 12, யாமின் அகமத்ஷாய் 1, முஜீப் உர் ரஹ்மான் 3, வாஃபாதர் ரன் ஏதும் எடுக்காத நிலையில் நடையை கட்ட முடி வில் ஆப்கானிஸ்தான் அணி 38.4 ஓவர்களில் 103 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஹஸ்மதுல்லா ஷாகிதி 36 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4, உமேஷ் யாவ் 3, அஸ்வின் 1 விக்கெட் கைப்பற்றினர். இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை கைப்பற்றி கோப்பையை வென்றது. ஆட்ட நாயகனாக ஷிகர் தவண் தேர்வானார்.

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி இரு நாட்களுக்குள் வெற்றி பெறுவது இதுவே முதன்முறை. 141 வருட கிரிக்கெட் வரலாற்றில் இரு நாட்களுக்குள் ஒரு அணி வெற்றி பெறுவது இது 21-வது டெஸ்ட் போட்டியாகும். அதேவேளையில் எதிரணியின் 20 விக்கெட்களையும் ஒரே நாளில் சாய்த்த முதல் அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்துள்ளது. குறுகிய வடிவிலான போட்டிகளில் சிறப்பாக செயல்படும் ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸையும் சேர்த்து வெறும் 66.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்துள்ளது அந்த அணியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. நீண்ட வடிவிலான போட்டியில் எந்த மாதிரியான தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது குறித்த புரிதல் இல்லாமலே வீழ்ந்துள்ளது ஆப்கானிஸ்தான்.

அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் குறுகிய வடிவிலான போட்டிக்கான மனப்பான்மையுடேன விளையாடினர். எந்த ஒரு வீரரும் டெஸ்ட் போட்டிக்கான பொறுமையை கடைபிடிக்கவில்லை. தரம் வாய்ந்த பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை உமேஷ் யாதவும், இஷாந்த் சர்மாவும் எளிதாக வீழ்த்த நடுகள வரிசை வீரர்களை அஸ்வின், ஜடேஜா ஜோடி பதம் பார்த்தது. இந்த ஆட்டத்தில் சிறிய அளவிலான இரு சாதனைகளும் படைக்கப்பட்டது. உமேஷ் யாதவ் 100 விக்கெட்கள் மைல்கல்லை எட்டினார். அதேபோல் அஸ்வின், ஜாகீர்கானின் 311 விக்கெட்கள் சாதனையை முறியடித்தார். 316 விக்கெட்கள் கைப்பற்றியுள்ள அஸ்வின், அதிக விக்கெட்கள் கைப்பற்றியுள்ள இந்திய வீரர்களின் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x