

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 9-வது ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்திருந்தது.
இந்நிலையில் இந்திய அணி நேற்று பாகிஸ்தானுடன் மோதியது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 105 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.
அதிகபட்சமாக நிடா தார் 28, முனீபா அலி 17, சயீடா அரோப் ஷா 14, கேப்டன் பாத்திமா சனா 13 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அருந்ததி ரெட்டி 3 விக்கெட்களையும், ஸ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ரேணுகா சிங், தீப்தி சர்மா, ஆஷா ஷோபனா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
106 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய மகளிர் அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தத் தொடரில் இந்திய அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. அதிகபட்சமாக ஷபாலி வர்மா 35 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 32 ரன்களும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 24 பந்துகளில், 29 ரன்களும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 28 பந்துகளில், 23 ரன்களும் சேர்த்தனர்.
இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 9-ம் தேதி இலங்கையுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் துபாயில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.