

குவாலியர்: வங்கதேச அணியுடனான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகளில் வென்றது இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி. இந்தப் போட்டியில் அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.
குவாலியரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பந்து வீச முடிவு செய்தார். இந்திய அணியில் மயங்க் யாதவ் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் இந்தப் போட்டியில் அறிமுக வீரர்களாக களம் கண்டனர். சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வருண் சக்கரவர்த்தி சர்வதேச போட்டியில் விளையாடினார்.
முதலில் பேட் செய்த வங்கதேச அணி, 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் எடுத்தது. மெஹிதி ஹசன் மிராஸ் 35 மற்றும் கேப்டன் ஷான்டோ 27 ரன்கள் எடுத்தனர். அர்ஷ்தீப் மற்றும் வருண் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஹர்திக், மயங்க் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். டஸ்கின் அகமது ரன் அவுட் ஆனார்.
128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். 7 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து அபிஷேக் ரன் அவுட் ஆனார். சூர்யகுமார் யாதவ், 14 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சனும் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
ஐந்தாவது பேட்ஸ்மேனாக களம் கண்ட ஹர்திக் பாண்டியா 16 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அசத்தினார். 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களை அவர் விளாசினார். நிதிஷ் ரெட்டியும் தனது முதல் போட்டியில் ஒரு சிக்ஸருடன் 16 ரன்கள் எடுத்திருந்தார். 11.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை அர்ஷ்தீப் வென்றார். மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் இரண்டாவது போட்டி டெல்லியில் வரும் புதன்கிழமை நடைபெற உள்ளது.