முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா - வங்கதேசம் இன்று மோதல்

பயிற்சியில் ஈடுபட்ட சூர்யகுமார் யாதவ்
பயிற்சியில் ஈடுபட்ட சூர்யகுமார் யாதவ்
Updated on
2 min read

குவாலியர்: இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி குவாலியரில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என முழுமையாக வென்றது. இந்நிலையில் இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளன. இதன் முதல் ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு குவாலியரில் உள்ள ஸ்ரீமன் மாதவராவ் சிந்தியா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுவாகும்.

இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்குகிறது. இந்த மாத இறுதியில் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளதால் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் ஷுப்மன் கில், ரிஷப் பந்த், யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ், அக்சர் படேல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி அனைவரையும் கவர்ந்த இளம் வீரரான மயங்க் யாதவ், டெல்லியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா, ஆல்ரவுண்டர் நித்திஷ் குமார் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பெற்றுள்ளனர். இதில் மயங்க் யாதவ் காயத்தில் இருந்து குணமடைந்த நிலையில் களமிறங்குகிறார். ஐபிஎல் தொடரில் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய அவர், பந்தை நன்கு கட்டுக்குள் வைத்திருந்தார். இதனால் அவர், மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் மட்டுமே அனுபவம் வாய்ந்த வீரர்களாக உள்ளனர். இவர்களுடன் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடிய ஷிவம் துபே, அர்ஷ்தீப் ஆகியோரும் வலுசேர்ப்பவர்களாக உள்ளனர். தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஜோடி களமிறங்கக்கூடும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் சதம் விளாசியிருந்த அபிஷேக் சர்மாவிடம் இருந்து மேலும் ஓர் அதிரடி ஆட்டம் வெளிப்படக்கூடும். அதேவேளையில் ஜிம்பாப்வே தொடரில் கவனம் ஈர்க்கத் தவறிய ரியான் பராக் பார்முக்கு திரும்புவதற்கு இந்த தொடரை பயன்படுத்திக் கொள்ளக்கூடும்.

2021-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் அணிக்கு திரும்பியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி மீதும் எதிர்பார்ப்பு உள்ளது. அவருடன் பிரதான சுழற்பந்து வீச்சாளர்களாக ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் அணியில் உள்ளனர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஜிதேஷ் சர்மா அணியில் இருந்தாலும் அவருக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான்.

வங்கதேசதேச அணியானது ஆல்ரவுண்டரான ஷகிப் அல் ஹசன் இல்லாமல் களமிறங்குகிறது. டெஸ்ட் தொடரின் போதே அவர், டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். மெஹிதி ஹசன் 14 மாதங்களுக்கு பிறகு டி20 அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். டெஸ்ட் தொடரை இழந்துள்ள வங்கதேச அணி டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும்.

வங்கதேசம்: நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (கேப்டன்), தன்ஸித் ஹசன் தமிம், பர்வேஷ் ஹொசைன், தவ்ஹித் ஹிர்தோய், முஹ்மதுல்லா, லிட்டன் தாஸ், ஜாகர் அலி அனிக், மெஹிதி ஹசன், ஷாக் மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், முஸ்டாபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப், ரகிபுல் ஹசன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in