Published : 05 Jun 2018 07:50 PM
Last Updated : 05 Jun 2018 07:50 PM

டெஸ்ட்டில் வெற்றி கேப்டன் யார்? ரிக்கி பாண்டிங்கா? கிரேம் ஸ்மித்தா?

டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளை அதிகம் குவித்த கேப்டன்கள் யார் என்பது கிரிக்கெட்டில் ஒரு சுவாரசியமான கேள்வி. கிரிக்கெட் ஆட்டத்தில் மிகச்சிறந்த கேப்டன்கள் இருந்துள்ளனர், இவர்களில் பலரை வெற்றிகளை வைத்து தீர்மானிக்க முடியாது. ஆனால் கிரிக்கெட் ஆகட்டும் எந்த ஒரு விளையாட்டாகட்டும் வெற்றிதானே பேசும்.

அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த கேப்டன் யார் என்று பார்த்தோமானால், புள்ளிவிவரங்கள் கூறுவது என்னவென்பதைப் பார்ப்போம்:

தென் ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித் மிகவும் சிறிய வயதில் (21-22) ஒரு தேசிய அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்று இன்று வரை அதிக வெற்றிகளைத் தன் தலைமையில் குவித்து நம்பர் 1 இடத்தில் உள்ளார்.

கிரேம் ஸ்மித் 109 டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவை வழிநடத்தியுள்ளார் இதில் 53-ல் வென்று சிறந்த வெற்றிக்கேப்டன்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார்.

இவருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் இருக்கிறார். இவர் 77 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்து 48 டெஸ்ட்களில் வெற்றி பெற்றுள்ளார்.

ஆனால் விகிதாச்சார முறைப்படி பார்த்தால் ஸ்டீவ் வாஹ் 57 டெஸ்ட் போட்டிகளில் 41-ல் வென்று 71.93% வெற்றி விகிதத்தை கேப்டனாக வைத்துள்ளார், இவருக்கு அமைந்த அணி அப்படி. டான் பிராட்மேன் 24 டெஸ்ட்களில் கேப்டனாக 15-ல் வென்று 62.5% வைத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் ஃபாப் டுபிளெசிஸ் இப்போதைக்கு 23 டெஸ்ட்களில் 15-ல் வென்று 65.22% வைத்துள்ளார்.

கிரேம் ஸ்மித் தவிர ஆலன் பார்டர் 93 டெஸ்ட்களில் 32 வெற்றிகளையும், ஸ்டீபன் பிளெமிங் 80 போட்டிகளில் 23 வெற்றிகளையும் பெற்றுள்ளார்.

கிளைவ் லாய்ட் 74 போட்டிகளில் 36ஐ வென்றுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் தோனி 60 டெஸ்ட் போட்டிகளில் 27-ல் வென்றுள்ளார்.

மிஸ்பா உல் ஹக் 56-ல் 26ஐ வென்றுள்ளார். ஹான்சி குரோனியே 53 டெஸ்ட்களில் 27-ல் வென்றுள்ளார். விவ் ரிச்சர்ட்ஸ் 50 டெஸ்ட் போட்டிகளில் 27-ல் வென்றுள்ளார். கங்குலி 49 டெஸ்ட்களில் 21ஐயும் கங்குலியைக் காலி செய்த கிரெக் சாப்பல் 48 டெஸ்ட்களில் 21-ஐயும் வென்றுள்ளனர்.

இம்ரான் கான் 48 டெஸ்ட்களில் 14-ல்தான் வென்றுள்ளார் அசாருதீன் 47 டெஸ்ட் போட்டிகளில் 14ஐ வென்றுள்ளார், ஆனால் அசாருதீன், இம்ரானை விட பெரிய கேப்டன் என்று கூறிவிட முடியுமா? சிறந்த கேப்டன்கள் பட்டியலில் களவியூகம், பந்து வீச்சு மாற்றம், முக்கியக் கட்டங்களில் முக்கிய முடிவுகளை எடுத்தல் ஆகியவற்றில் இம்ரான் கான், ஹேன்சி குரோனியே, அர்ஜுணா ரணதுங்கா, மார்க் டெய்லர் போன்றவர்கள் முன்னோடிகள். இந்தியாவைப் பொறுத்தவரையில் முதலில் பட்டௌடி, பிறகு கங்குலி, பிறகு தோனி என்று கூறலாம்.

 

புள்ளி விவர ஆதாரம்: ஈஎஸ்பிஎன கிரிக் இன்போ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x