இந்திய வீரர்களுக்கு ஆன்மிக வழிகாட்டுதல் தேவை: ஜெஃப் பாய்காட்

இந்திய வீரர்களுக்கு ஆன்மிக வழிகாட்டுதல் தேவை: ஜெஃப் பாய்காட்
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஆன்மிக வழிகாட்டுதல் தேவை என்று கடைசி டெஸ்ட் தொடங்கவுள்ள நிலையில் முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜெஃப் பாய்காட் தெரிவித்துள்ளார்.

நாளை ஓவல் மைதானத்தில் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ கேள்விபதில் நிகழ்ச்சியில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த ஜெஃப் பாய்காட் இவ்வாறு கூறியுள்ளார்.

“நான் அவர்கள் (இந்திய அணியினர்) அனைவரையும் திருக்கோயிலுக்கு அனுப்பி வேண்டிக்கொள்ளச் செய்வேன். அவர்கள் தீவிரமாக வேண்டிக்கொள்ளுதல் அவசியம்.

அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது. ஆன்மிக வழிகாட்டுதல் இந்திய அணிக்குத் தேவை. ஏதாவது ஒரு சக்திதான் இந்திய அணியை எழுச்சியுறச் செய்ய வேண்டும்.ஆனாலும் இதுவும் கூட மிகவும் தாமதமான செயலே. அந்த அணி அவ்வளவுதான், அவர்கள் தொடரைத் தொலைத்து விட்டனர் என்ற எண்ணம் அதிகம் உள்ளது. மான்செஸ்டரில் சரணாகதி அடைந்தனர். சிறப்பாக விளையாடும் விருப்புறுதியை இந்திய அணி இழந்து விட்டது.

நடுவர் தீர்ப்பு மேல்முறையீடு (டி.ஆர்.எஸ்.) இந்தியாவுக்கு உதவும். இந்தத் தொடரில் டி.ஆர்.எஸ். இல்லாதது இந்தியாவுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தோனி இதற்கு நீண்ட நாட்களாக எதிர்ப்பு காட்டி வருகிறார். ஆனால் அவர் இதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும்.

எதிர்ப்பதாக இருந்தாலும் அதில் உள்ள அனுகூலங்களை இந்தியா உணர வேண்டும். சவுதாம்ப்டனில் இயன் பெல் நேராக எல்.பி. ஆனார். ஆனால் நாட் அவுட் என்றார் நடுவர் பெல் 150 ரன்களை எடுத்தார். அது மிடில் ஸ்டம்பைத் தாக்கிய பந்து. டி.ஆர்.எஸ். முறை இல்லாததால் பெல் நீடித்தார்.

மான்செஸ்டரில் மொயீன் அலி பந்தில் புஜாராவுக்கு எல்.பி. கொடுத்தது அபத்தமாகும். அது நிச்சயம் அவுட் அல்ல. இவையெல்லாம் இந்திய அணிக்கு எதிராகச் சென்றது. எனவே ஈகோவை விடுத்து டி.ஆர்.எஸ் முறையை இந்திய கேப்டன் அல்லது பிசிசிஐ ஏற்றுக் கொள்ள வேண்டும்” இவ்வாறு கூறியுள்ளார் ஜெஃப் பாய்காட்.

மேலும் மற்றொரு கேள்விக்குப் பதில் அளித்த பாய்காட், அஜிங்கிய ரஹானேயை 3ஆம் நிலை வீரராக களமிறக்கிப் பார்க்கலாம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in