Published : 26 Jun 2018 09:07 AM
Last Updated : 26 Jun 2018 09:07 AM

போலந்தை வெளியேற்றியது கொலம்பியா: 3-0 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் கொலம்பியா 3-0 என்ற கோல் கணக்கில் போலந்து அணியை வீழ்த்தியது. இதன் மூலம் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் கொலம்பியா அணி நீடிக்கிறது. அதேவேளையில் இரு தோல்விகளை சந்தித்த போலந்து அணி தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ரஷ்யாவின் கஸான் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ஹெச் பிரிவில் உள்ள கொலம்பியா - போலந்து அணிகள் மோதின. தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள போலந்து 3-4-3 என்ற பார்மட்டிலும், 16-வது இடத்தில் உள்ள கொலம்பியா 4-2-3-1 என்ற பார்மட்டிலும் களமிறங்கியது. 5-வது நிமிடத்தில் போலந்து வீரர் பார்டோஸ் பெரெஸ்ஸின்ஸ்கியின் கிராஸை பெற்ற ராபர்ட் லெவண்டோவ்ஸ்கி, பாக் ஸின் மையப்பகுதியில் இருந்து தலையால் முட்டிய பந்து தடுக்கப்பட்டது. 15-வது நிமிடத்தில் கொலம்பியாவின் சான்டியாகோ ஆரியாஸ், பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து உதைத்த பந்து இடைமறிக்கப்பட்டது.

35-வது நிமிடத்தில் கொலம்பியாவின் டேவிசன் சான்செஸ் உதவியுடன் பந்தை பெற்ற ஜூவான் குவாட்ரடோ, பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து உதைத்த பந்து கோல்கம்பத்துக்கு வெளியே இடது பக்கம் விலகிச் சென்றது. 40-வது நிமிடத்தில் கொலம்பியா முதல் கோலை அடித்தது. கார்னரில் இருந்து அடிக்கப்பட்ட பந்தை ஜேம்ஸ் ரோட்ரிக்ஸிடம் இருந்து பெற்ற யெர்ரி மினா, கோல்கம்பத்துக்கு மிக நெருக்கமான நிலையில் இருந்து தலை யால் முட்டி கோலாக மாற்றினார். இதனால் முதல் பாதியில் கொலம்பியா அணி 1-0 என்ற கோல் கணக் கில் முன்னிலை வகித்தது.

49-வது நிமிடத்தில் ராபர்ட் லெவண்டோவ்ஸ்கி, பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து தலை யால் முட்டிய பந்து கோல்கம்பத்துக்கு மேலாகச் சென்றது. 51-வது நிமிடத்தில் கொலம்பியாவின் ஜூவான் குயின்டெரோ பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து அடித்த பந்து, கோல்கம்பத்துக்கு வலது புறம் விலகிச் சென்றது. அடுத்த நொடியில் அந்த அணியின் வீரர் பால்கோ, பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து இலக்கை நோக்கி வலுவாக அடித்த ஷாட், கோல்கம்பத்துக்கு மேலாக சென்று ஏமாற்றம் அளித்தது.

53-வது நிமிடத்தில் ஜூவான் குவாட்ரடோ உதவியுடன் பந்தை பெற்ற ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ், பாக்ஸின் வலது புறத்தில் இருந்து அடித்த பந்து தடுக்கப்பட்டது. 57-வது நிமிடத்தில் கார்னர் பகுதியில் இருந்து பந்தை பெற்ற ஜூவான் குவாட்ரடோ பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து அடித்த பந்து கோல்கம்பத்துக்கு மேலாக சென்றது. 58-வது நிமிடத்தில் போலந்து வீரர் கிரிச்சோயாக்கிடம் இருந்து பந்தை பெற்ற ராபர்ட் லெவண்டோவ்ஸ்கி, பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து அடித்த பந்தை கொலம்பியா கோல்கீப்பர் ஒஸ்பினா கோல்கம்பத்தின் மையப்பகுதியில் மடக்கினார். 70-வது நிமிடத்தில் கொலம்பியா அணி 2-வது கோலை அடித்தது.

ஜூவான் குயின்டெரோ உதவியுடன் எதிரணி டிபன்டர்களுக்கு ஊடாக பந்தை பெற்ற பெற்ற பால்கோ, முன்னேறி வந்த கோல்கீப்பரின் தடுப்பை மீறி பாக்ஸின் வலது புறத்தில் இருந்து பந்தை கோல் வலைக்குள் திணித்தார். அடுத்த 5-வது நிமிடத்தில் ஜூவான் குவாட்ரடோ, எதிரணியின் டிபன்டர்களால் எந்த வகையிலும் இடையூறு செய்யப்படாமல் பந்தை கடத்திச் சென்று கோல்கீப்பரின் தடுப்பை மீறி கோல் அடிக்க, போலந்து அணி அதிர்ச்சியில் உறைந்தது. இந்த கோலால் கொலம்பியா 3-0 என முன்னிலை பெற்றது. இதன் பின்னர் போலந்து அணி கடைசி கட்ட நிமிடங்களில் போராடியது.

88-வது நிமிடத்தில் ராபர்ட் லெவண்டோவ்ஸ்கி அடித்த பந்தை கோல்கம்பத்தின் மையப்பகுதியில் ஓஸ்பினா தடுத்து நிறுத்தினார். இதன் பின்னர் காயங்களுக்காக வழங்கப்பட்ட இழப்பீடு நிமிடங்களிலும் போலந்து அணியால் கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் கொலம்பியா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கொலம்பியா அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. அந்த அணி முதல் ஆட்டத்தில் ஜப்பானிடம் தோல்வி கண்டிருந்தது. தற்போது பெற்ற வெற்றியால் 3 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது கொலம் பிய அணி. அதேவேளையில் இரு ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த போலந்து அணி தொடரில் இருந்து வெளியேறியது.

ஜப்பான் ஆட்டம் டிரா

முன்னதாக ஹெச் பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் - செனகல் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. ஜப்பான் தரப்பில் இனியு, ஹோண்டா ஆகியோர் தலா ஒரு கோலும், செனகல் தரப்பில் மானே, மவுசா ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். ஜப்பான் கடைசி லீக் ஆட்டத்தில் 28-ம் தேதி போலந்து அணியையும், அதே நாளில் சென கல் அணி கொலம்பியாவையும் சந்திக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x