இலங்கை அணியின் புதிய ‘சென்சேஷன்’ - கமிந்து மெண்டிஸ் உலக சாதனை!

இலங்கை அணியின் புதிய ‘சென்சேஷன்’ - கமிந்து மெண்டிஸ் உலக சாதனை!
Updated on
2 min read

காலே டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இலங்கை அணி வீரர் கமிந்து மெண்டிஸ் உலக சாதனை புரிந்தார். அதாவது 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 56 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். அறிமுகமாகி தொடர்ச்சியாக 8 டெஸ்ட் போட்டிகளில் அரைசதம் மற்றும் அதற்கும் கூடுதலாக ரன்களை எடுத்து உலக சாதனை புரிந்து பெருமை சேர்த்துள்ளார் கமிந்து மெண்டிஸ்.

அறிமுகமாகி சிறிது காலம் கழித்து ஒரு கட்டத்தில் 11 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக அரை சதங்கள் அடித்த உலக சாதனையை மே.இ.தீவுகளின் மாஸ்டர் பிளாஸ்டர் விவ் ரிச்சர்ட்ஸ் வைத்துள்ளார். கமிந்து மெண்டிஸ் செய்த சாதனை அறிமுகமாகி தொடர்ச்சியாக 8 டெஸ்ட் போட்டிகளில் அரைசதம் மற்றும் அதற்கும் கூடுதலான ரன்களை எடுத்த உலக சாதனையாகும்.

ஜூலை 2022-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான கமிந்து மெண்டிஸ் அந்தப் போட்டியில் 61 ரன்களை எடுத்தார். அதன் பிறகு 102,164, 92 நாட் அவுட், 113, 74, 64,114,51 என்று தொடர்ச்சியாக 8 டெஸ்ட் போட்டிகளில் ஏதாவது ஒரு இன்னிங்ஸிலாவது அரைசதம் அடிக்காமல் அவர் அவுட் ஆனதில்லை.

உலக கிரிக்கெட்டில் கமிந்து மெண்டிஸின் வருகையும் அவரது ஆட்டமும் பரபரப்பாக கிரிக்கெட் உலகில் பேசப்பட்டு வருகிறது. நேற்று முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை வீரர் சந்திமால் 116 ரன்கள் எடுத்து தன் 16-வது டெஸ்ட் சதத்தை எட்டினார். முதல் நாள் ஆட்ட முடிவில் நியூஸிலாந்து 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 306 ரன்கள் என்ற வலிமையான நிலையில் உள்ளது.

அஞ்சேலோ மேத்யூஸும் அரைசதம் எடுக்க, கமிந்து மெண்டிஸ் உலக சாதனை அரைசதம் எடுக்க, நியூஸிலாந்து விட்ட கேட்ச்களை நினைத்து வருந்திருக்கும். டேரில் மிட்செல் ஸ்லிப்பில் 2 கேட்ச்களைக் கோட்டை விட்டார். கருணரத்னேவுக்கு ஸ்டம்பிங் வாய்ப்பு நழுவ விடப்பட்டது. மேத்யூஸ் அவுட் ஆன பந்து ரூர்கேவின் நோ-பால் ஆக அமைந்தது. ஆரம்பத்தில் கொஞ்சம் ஸ்விங் ஆன போது டிம் சவுதி, பதும் நிசாங்கா விக்கெட்டை வீழ்த்தினார். ஆனால் சந்திமால் இதே 3ம் நிலையில் இறங்கி வெளுத்து வாங்கி வருகிறார். நேற்றும் வேகப்பந்து வீச்சை பாசிட்டிவ் ஆக ஆடினார். காலே மைதானத்தில் சந்திமால் எடுத்த 6-வது சதமாகும் இது. மூன்றாம் நிலையில் இறங்கத் தொடங்கி 8 இன்னிங்ஸ்களில் 4-வது அரைசத பிளஸ் ஸ்கோராகும் இது.

கமிந்துவுக்கும் அதிர்ஷ்டம் இருந்தது, டேரில் மிட்செல் விட்ட 2-வது ஸ்லிப் கேட்ச் இவருக்குத்தான், ஆனால் 2-வது புதிய பந்தில் சிலபல பவுண்டரிகளை விளாசி அஜாஜ் பந்தை ஸ்லாக் ஸ்வீப்பில் சிக்ஸ் விளாசி, அதிரடி அரைசதம் கண்டு உலக சாதனை புரிந்தார் கமிந்து. அவர் இப்போது சதத்தை நெருங்கியுள்ளார். இரண்டாம் நாள் ஆட்டத்தில் உணவு நேர இடைவேளையின் போது 5 விக்கெட் இழப்புக்கு 402 ரன்கள் எடுத்துள்ளது இலங்கை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in