ஐசிசி பேட்டிங் தரவரிசையில் ரோஹித் சர்மா, கோலிக்கு பின்னடைவு: டாப் 10-க்கு திரும்பினார் ரிஷப் பந்த்

ஐசிசி பேட்டிங் தரவரிசையில் ரோஹித் சர்மா, கோலிக்கு பின்னடைவு: டாப் 10-க்கு திரும்பினார் ரிஷப் பந்த்
Updated on
1 min read

துபாய்: டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் வங்கதேச அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் 731 புள்ளிகளுடன் 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதே போட்டியில் அரை சதம் அடித்த தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 751 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா 5 இடங்களை இழந்து 716 புள்ளிகளுடன் 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா இரு இன்னிங்ஸையும் சேர்த்து 11 ரன்களே சேர்த்திருந்தார். இதேபோன்று விராட் கோலியும் 5 இடங்களை இழந்து 709 புள்ளிகளுடன் 12-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் ஜோ ரூட் (899), நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் (852), டேரில் மிட்செல் (760), ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (757) ஆகியோர் முறையே முதல் நான்கு இடங்களில் உள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா (728), பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (720), ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷேன் (270) ஆகியோர் முறையே 7 முதல் 9-வது இடங்களில் உள்ளனர். பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இலங்கையின் பிரபாத் ஜெயசூர்யா 743 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர், 9 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 871 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஜஸ்பிரீத் பும்ரா 854 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். ரவீந்திர ஜடேஜா 804 புள்ளிகளுடன 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in