

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில்இன்று இரவு 7.30 மணிக்குசென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - முகமதன் எஸ்சி அணிகள் மோதுகின்றன. சென்னையின் எஃப்சி அணி, இந்த சீசனில் சொந்த மைதானத்தில் விளையாடும் முதல் ஆட்டம் இதுவாகும். அந்தஅணி தனது முதல் ஆட்டத்தில் ஒடிசா எஃப்சி அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது.
அதேவேளையில் அறிமுக அணியான முகமதன் அணிக்கு இது 3-வது ஆட்டமாகும். அந்தஅணி தனது முதல் இரு ஆட்டங்களையும் சொந்த மைதானத்தில் (கொல்கத்தா) விளையாடியிருந்தது. இதில் நார்த் ஈஸ்ட் யுனைட்டு எஃப்சி அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 1-0 என்றகோல் கணக்கில் முகமதன் அணி தோல்வி அடைந்திருந்தது. அடுத்த ஆட்டத்தில் எஃப்சி கோவா அணிக்கு எதிராக 1-1 என டிரா செய்திருந்தது.
ஒடிசா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரு கோல்களை அடித்த சென்னையின் எஃப்சி வீரர் ஃபரூக் சவுத்ரி மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இதேபோன்று டேனியல் சிமா சுக்வு, ஜோர்டான் வில்மர் கில்ஆகியோரும் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர். சென்னையின் எஃப்சி தனதுசொந்த மைதானத்தில் கடைசியாக விளையாடிய 7 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்த சீசனில் சொந்தமைதான போட்டியை வெற்றியுடன் தொடங்குவதில் அந்த அணிமுனைப்புடன் செயல்படக்கூடும்.
முகமதன் அணி முதன்முறையாக சொந்த மைதானத்துக்கு வெளியே விளையாட உள்ளது. அந்த அணி தனது 2-வதுஆட்டத்தில் பாக்ஸ் பகுதிக்கு உள்ளே இருந்து 15 ஷாட்களை இலக்கை நோக்கி அடிக்க முயற்சித்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அந்த அணி சென்னையின் எஃப்சி டிஃபன்ஸுக்கு கடும் சவால்தரக்கூடும்.