

உலகிலேயே அதிக ஊதியம் பெறும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் ஒரே ஒரு இந்திய வீரர் விராட் கோலி மட்டுமே இடம் பெற்றுள்ளார் என்று ‘போர்ப்ஸ்’ பத்திரிகை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், அதிகமான ஊதியம் பெறும் வீரராக குத்துச்சண்டை வீரரும், அமெரிக்காவைச் சேர்ந்தவருமான பிளாய்ட் மேவெதர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
2018-ம் ஆண்டில் உலகிலேயே அதிகமான ஊதியம் பெறும் 100 விளையாட்டு வீரர்கள் குறித்து ஆய்வு நடத்தி அந்த பட்டியலை ‘போர்ப்ஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் முதலிடத்தில் அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மேவெதர் உள்ளார். இவர் ஆண்டுக்கு 28.5 கோடி டாலர் வருமானம் ஈட்டுகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆண்டுக்கு 2.40 கோடி டாலர் வருமானம்(ரூ.160 கோடி) ஈட்டி 83-வது இடத்தில் உள்ளார். இவர் தொடர்ந்து 3-வது ஆண்டாக போர்ப்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். பூமா, பெப்சி, ஆடி, ஆக்லே உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் விளம்பரத் தூதராகவும், விளம்பரத்திலும் நடித்து விராட் கோலி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறார்.
ட்விட்டரில் 2.50 கோடி பேர் விராட் கோலியை பின் தொடர்கிறார்கள் என்று போர்ஸ் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த ஆண்டு பிசிசிஐ அமைப்பு விராட் கோலி உள்ளிட்ட 5 வீரர்கள் (A+)ஏபிளஸ் ஊதியம் பெறும் பட்டியலிலும் சேர்த்துள்ளது. இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6.70 கோடி ஊதியம் தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர முதல் 100 இடங்களில் என்பிஏ எனப்படும் கூடைப்பந்தாட்ட வீரர்கள் 40 பேர் அதிக ஊதியம் பெறும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அமெரிக்கன் ரக்பி எனப்படும் என்எப்எல் போட்டியில் விளையாடும் 18 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் மாட் ரியான் ஆண்டுக்கு 6.75 கோடி டாலர் ஊதியம் பெற்று 9-வது இடத்தில் உள்ளார்.
பேஸ்பால் விளையாட்டில் 14 வீரர்களும், கால்பந்து வீரர்கள் 9 பேரும், கோல்ப் விளையாட்டு வீரர்கள் 5 பேரும், குத்துச்சண்டை, டென்னிஸ் வீரர்கள் தலா 4 பேரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மேலும், ஓட்டபந்தய வீரர் உசேன் போல்ட் 3.1 கோடி டாலர் ஊதியம் பெற்று அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
100 பேர் கொண்ட பட்டியலில் ஒரு வீராங்கனைகள் கூட இடம் பெறவில்லை. இதற்குமுன் பட்டியலில் இடம் பெற்றிருந்த சீனாவின் லீ நா, ரஷ்யாவின் மரியா ஷரபோவா, அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோரும் இந்த ஆண்டு பட்டியலில் இடம் பெறவில்லை.
லீ நா டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார், ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி 15 மாதங்களுக்குப் பின் ஷரபோவா தற்போதுதான் விளையாட வந்துள்ளார், மேலும், குழந்தை பெற்று செரீனாவும் தற்போது விளையாடி வருகிறார் என்பதால், இவர்களின் வருமானம் கணிசமாகக் குறைந்தது. இதனால், இவர்கள் இடம் பெறவில்லை.
கால்பந்து வீரர்கள் லியோனல் மெஸ்ஸி 2-ம் இடத்திலும், 3-வது இடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 3-வது இடத்திலும் உள்ளனர். மெஸ்ஸியின் ஆண்டு வருவானம் 8 கோடி டாலர்களுக்கும் அதிகமாகும். ரொனால்டோ 10.8 கோடி டாலர்களும் ஊதியம் பெறுகிறார்.
பிரேசில் வீரர் நெய்மர் ஆண்டுக்கு 9 கோடி டாலர்கள் வருமானம் ஈட்டி, 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் 7-வது இடத்திலும், கூடைப்பந்தாட்ட வீரர் லிப்ரான் ஜேம்ஸ் 6-வது இடத்திலும், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 20-வது இடத்திலும் உள்ளனர். கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் 16-வது இடத்திலும், ரோரி மெக்ராய் 26-வது இடத்திலும் உள்ளனர்.