

ஷார்ஜா: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 177 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தொடரை வென்று சாதனை படைத்தது.
ஷார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 311 ரன்கள் குவித்தது. தனது 7-வது சதத்தை விளாசிய தொடக்க வீரானரஹ்மனுல்லா குர்பாஸ் 110 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் விளாசினார். அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 50 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 86 ரன்களும், ரஹ்மத் ஷா 66 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 50 ரன்களும் சேர்த்தனர்.
312 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியானது ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 34.2 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் தெம்பா பவுமா 38 ரன் சேர்த்தார். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் ரஷித் கான் 5, நங்கேயாலியா கரோதே 4 விக்கெட்களை வீழ்த்தினர்.
177 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-0 என கைப்பற்றியது. முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதன்முறையாக இருதரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடிய நிலையில் ஆப்கானிஸ்தான் அணி தொடரைகைப்பற்றி சாதனை படைத்துள்ளது. மேலும் ஐசிசி தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் உள்ள அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி தொடரை வெல்வது இதுவே முதன்முறையாகும். கடைசி ஒருநாள் போட்டி இன்று மாலை 5.30 மணிக்கு ஷார்ஜாவில் நடைபெறுகிறது.