Published : 26 Jun 2018 09:33 AM
Last Updated : 26 Jun 2018 09:33 AM

திக்.. திக்.. கடைசி நிமிடங்கள்: ஸ்பெயினை கதிகலக்கிய மொராக்கோவின் துயர வெளியேற்றம்

உலகக்கோப்பை குரூப் பி ஆட்டத்தில் நேற்று மொராக்கோ அணி ஸ்பெயின் அணியின் வயிற்றில் புளியைக் கரைத்தது. 2-1 என்று மொராக்கோ முன்னிலையில் இருந்த போதுதான் அந்த கடைசி நேர திக் திக் கணங்கள் ஸ்பெயின் அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏற்பட்டது.

மொராக்கோ 14ம் நிமிடத்தில் காலித் பூட்டைப் மூலம் முதல் கோலை அடிக்க ஸ்பெயின் அணி அலார்கன் இஸ்கோ மூலம் 19வது நிமிடத்தில் சமன் செய்தது, ஆனால் ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் யூசெஃப் என் நெஸிரி எதிர்பாராதவிதமாக ஒரு கோலை அடிக்க மொராக்கோ 2-1 என்று முன்னிலை பெற்றது.

அதன் பிறகுதான் திக் திக் நிமிடங்கள், ஸ்பெயின் முதல் சுற்றிலேயே வெளியேறும் அபாயம் இல்லாவிட்டாலும் தோல்வி என்பது அடுத்த சுற்றில் நுழையும் போது மற்ற அணிகள் ஸ்பெயினை ஒரு தொக்காக பாவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கும்.

ஆனால் 92வது நிமிடத்தில் 1-2 என்று பின் தங்கிய நிலையில் ஸ்பெயின் வீரர் இயாகோ ஆஸ்பாஸ் ஒரு கோலை அடிக்க, ஆட்டம் முடிய இன்னும் சில நிமிடங்களே இருந்த நிலையில் நடுவர் ஆஃப் சைடு, கோல் இல்லை என்று தீர்ப்பளித்தார். ஸ்பெயினின் கொண்டாட்டங்கள் முடிவுக்கு வர ஸ்டேடியமே திக் திக் என்று வீடியோ நடுவரின் முடிவு என்னவாக இருக்கும் என்று கைகளைத் தேய்த்தபடி, நகங்களை கடித்தபடி காத்திருந்தன.

 

வீடியோ நடுவர் ஆஃப்சைடு இல்லை என்று தீர்ப்பளிக்க ஸ்பெயினின் கடைசி நிமிட கோல் 2-2 என்று மொராக்கோவுடன் ஒரு ட்ராவை ஏற்படுத்தியது, இதே வேளையில் ஈரானுக்கு சர்ச்சைக்குரிய ஒரு பெனால்ட்டியை போர்ச்சுகலுக்கு எதிராகக் கொடுக்க அது கோலாக 2வது இடத்திலிருந்த ஸ்பெயின் குரூப் ‘பி’யில் முதலிடத்துக்குத் தாவ இறுதி 16-ல் ரஷ்யாவை எதிர்த்து விளையாட மாஸ்கோ செல்கிறது ஸ்பெயின், இல்லையெனில் சோச்சிக்குச் சென்று உருகுவே என்ற கடினமான அணியை எதிர்கொள்ள நேரிட்டிருக்கும்.

இந்த கடைசி நிமிட வீடியோ ரெஃபரலால் ட்ரா ஆனதையடுத்து கடுப்பான மொராக்கோவின் நார்டின் அம்ராபட், “வீடியோ ரெஃபரல் ஒரு புல்ஷிட்” என்று திட்டினார்.

ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் அம்ராபட் ஒரே நேரத்தில் இஸ்கோ, ரேமோஸ் ஆகியோரை ஃபவுல் செய்தார். ஒன்றும் நடக்கவில்லை, ஆனால் 8வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் பிகே மொராக்கோ வீரர் பூட்டைபை மிகவும் நேரடியாக ஃபவுல் செய்தார். மிகவும் மோசமான சேலஞ்ச் அது. அதற்காக அவர் சிகப்பு அட்டைக் காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எதுவும் நடக்கவில்லை. 10 வீரர்களாகியிருக்க வேண்டிய ஸ்பெயின் தப்பியது.

இந்நிலையில் ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் மைதானத்தின் நடுவில் ரேமோஸ், இனியெஸ்டா இருவரும் பந்தை எடுப்பது நீயா நானா என்று ஆட பூட்டைப் புகுந்து பந்தை எடுத்து வந்தார் யாரும் இல்லை, வேகமாக ஸ்பெயின் எல்லைக்குள் நுழைந்தார் ஸ்பெயின் கோல் கீப்பர் டி ஜியா பதற்றத்தில் வெகுமுன்னால் வந்தார் இது பூட்டைபுக்கு சவுகரியமாக அமைய கோலுக்குள் பந்தை செலுத்தினார் 1-0 என்று முன்னிலை பெற்றது மொராக்கோ.

17வது நிமிடத்தில் 25 அடியிலிருந்து இனியெஸ்டா அடித்த ஷாட் கோலுக்கு வைடாகச் சென்றது.

ஆனால் ஸ்பெயினின் பின்னடைவு நீண்ட நேரம் நீடிக்கவில்லை. மிகப்பிரமாதமான ஒரு பாஸ் மூவில் இனியெஸ்டா முதலில் இஸ்கோவுக்கு பாஸ் செய்தார், இஸ்கோ, கோஸ்டாவுக்கு தட்டிவிட்டார், அவர் விரைவுகதியில் பாக்ஸுக்கு இடது புறம் இருந்த இனியெஸ்டாவுக்கு அனுப்பினார். அவர் தடுப்பாட்ட வீரருக்குப் போக்குக் காட்டி மேலும் உள்ளே ஊடுருவினார். பந்தை இஸ்கோவுக்கு அனுப்பினார், அவர் பந்தை கோலுக்குள் அனுப்பினார், ஸ்பெயின் 1-1 சமன்.

23வது நிமிடத்தில் கார்னர் ஷாட் ஒன்றை எடுத்த ஸ்பெயின் வீரர் பிகேயின் தலை ஷாட்டை மொராக்கோ கோல் கீப்பர் முனிர் தடுத்தார். 25வது நிமிடத்தில் மொராக்கோவுக்கு ஒரு அருமையான கோல் வாய்ப்பு கிடைத்தது. த்ரோ செய்ய வாய்ப்பு கிடைக்க மந்தமாக இருந்த பிகே, ரேமோஸ் ஆகியோருக்கு மேல் சென்ற பந்தை பூட்டைப் எடுத்து கோல் நோக்கி ஒரு முயற்சி செய்தார், அதனை டிஜியா பிடித்து விட்டார், இது கோலுக்கு மிக அருகில் கிடைத்த வாய்ப்பு, பூட்டைப் ஷூட் செய்யும் முன் கொஞ்சம் யோசித்தார், அது டிஜியாவை சுதாரிக்கச் செய்தது.

26வது நிமிடத்தில் இனியெஸ்டா மிக அபாரமாக ஆடி ஒரு நகர்த்தலைச் சாதிக்க, அல்பா பந்தை வெட்டி கோஸ்டாவுக்கு அனுப்ப 15 அடியிலிருந்து இடது கால் அரக்கத்தனத்தைக் காட்டினார் ஆனால் கோலாகவில்லை.

ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் ஸ்பெயின் முன்னிலை பெற ஒரு அபாரமான வாய்ப்புக் கோட்டை விடப்பட்டது, இஸ்கோ அடித்த உள்ளே வளைந்து வந்த கார்னர் ஷாட்டை பஸ்கெட்ஸ் 8 அடியிலிருந்து தலையால் முட்டினார், பந்து கோலுக்கு மேலே சென்றது, இது மிக அருமையான வாய்ப்பு ஏனெனில் இவரை மொராக்கோ கவர் செய்யாமல் விட்டிருந்தனர். கோல் வாய்ப்பு பறிபோனது. இடைவேளைக்கு சற்று முன் ஸ்பெயினுக்கு வாய்ப்பு கிடைத்தது. கோஸ்டா அடித்த ஷாட் கோலாக மாறவில்லை. ஆஃப் டைம் விசில் ஊதப்பட்டது 1-1 என்று சமநிலையில் இருந்தது.

விறுவிறுப்பான இரண்டாவது பாதி...

ஸ்பெயின் அணிக்கு இடைவேளைக்குப் பிறகு சரியாக அமையவில்லை, ஜார்ஜ் பிகே பந்தை ஹேண்ட்பால் செய்ததற்கு தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும் தப்பினார். முபாரக் பூசவுஃபா கோலுக்காக பாய்ச்சலை மேற்கொள்ள ஸ்பெயின் கோல் கீப்பர் டிஜியாவின் தடுப்பு அவ்வளவு சிறப்பாக இல்லை. அம்ராபட் ஒரு ஷாட்டை திகைப்பூட்டும் வண்ணம் ஸ்பெயின் கோலை நோக்கி அடித்தார், ஆனால் பந்து துரதிர்ஷ்டவசமாக வெளியே சென்றது. இவையெல்லாம் ஆஃப் டைமுக்குப் பிறகு 10 நிமிட ஆட்டத்தில் நடந்தது.

ஆபத்தை உணர்ந்த ஸ்பெயின் விறுவிறுவென்று ஆடத்தொடங்கியது. பந்தை அதிகம் இவர்களே வைத்திருந்தனர், பாஸ்கள் எண்ணிக்கை சில நிமிடங்களில் ஸ்பெயின் வசம் 500 என்று புள்ளிவிவரங்கள் கூறுமளவுக்கு ஸ்பெயின் அவசரம் காட்டியது. இஸ்கோவின் தலையால் முட்டிய முயற்சி ஒன்று கோலுக்குள் செல்லும் தருணத்தில் மொராக்கோ வீர்ரால் வெளியே அனுப்பப்பட்டது. ஸ்பெயின் அணிக்காக அசென்சியோ, ஆஸ்பாஸ் களமிறக்கப்பட்டனர்.

ஆட்டம் முடிய 15 நிமிடங்களே இருந்தன ஸ்பெயின் வெற்றி பெற 2 கோல்கள் தேவை. ஆட்டத்துன் 81வது நிமிடத்தில் மொராக்கோவுக்கு அந்த அற்புதமான 2 வது கோல் வாய்த்தது. வலது பக்கத்திலிருந்து அம்ராபட் பெனால்டி ஸ்பாட்டுக்கு மிக அழகாக கார்னர் ஷாட் ஒன்றை அனுப்ப உயரே எழும்பி வந்த பந்தை ரேமோஸ் உள்ளிட்ட ஸ்பெயின் வீரர்களுக்கும் மேல் அதீதமாக எம்பி புல்லட் ஷாட்டாக தலையால் அரக்கத்தனமாக ஒரு முட்டு முட்டினார் மொராகோவின் எந்நஸீரி. பந்து கோல் வலையைத் தாக்குவதை மற்றவர்கள் போல் ஸ்பெயின் கோல்கீப்பரும் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. மொராக்கோ 2-1 முன்னிலை.

2வது கோலை அடித்தவுடன் மொராக்கோ கோல் கீப்பர் முனிர் பந்தை வைத்துக் கொண்டு போக்குக் காட்டி நேர விரயம் செய்ததற்கு கார்டு காட்டப்பட்டு எச்சரிக்கப்பட்டார்.

அப்போதுதான் ஆட்டத்தின் கடைசி நிமிடங்கள் நடந்து கொண்டிருந்தது. அப்போது ஸ்பெயின் வீரர் ஆஸ்பாஸ் மோராக்கோ பாக்சிற்குள் தனக்கு வந்த பந்தை பிளிக் செய்து கோலாக்கினார், ஆனால் அது கோல் இல்லை ஆஃப் சைடு என்று தீர்ப்பளிக்கப்பட்டது, வாக்குவாதங்கள், மோதல்கள், கோபாவேசங்கள், அதிருப்திகள் என்று உணர்ச்சிகரக் கட்டமாக இருந்தது. ஆஃப் சைடா இல்லையா என்பது வீடியோ ரெஃபரலுக்குச் சென்றது, அதில் ஆஃப் சைடு இல்லை என்று தீர்ப்பாக கோல் என்று நடுவர் கைகாட்ட ஸ்பெயின் மொராக்கோ போட்டி 2-2 என்று ட்ரா ஆனது. ஸ்பெயின் இறுதி 16-க்கு முன்னேற, மொராக்கோ வெளியேறியது, ஆனால் மொராக்கோ அணி இன்னும் கொஞ்சம் ஆழமாக இந்தத் தொடரில் சென்றிருக்க வேண்டும், அவர்கள் ஆட்டம் புதிதானது, உத்தி புதிதானது, ஆற்றல் வேறு ஒருதளத்தில் இருப்பது, மொராக்கோ வெளியேறியது உலகக்கோப்பை 2018 கால்பந்துத் தொடரின் துரதிர்ஷ்டமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x