டிராவிஸ் ஹெட், லபுஷேன் கூட்டணி: முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸி.

டிராவிஸ் ஹெட்
டிராவிஸ் ஹெட்
Updated on
1 min read

நாட்டிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லபுஷேன் இணை அந்த அணியின் வெற்றிக்கு உதவியது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமன் ஆனது. தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது.

நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்து 49.4 ஓவர்களில் 315 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணி சார்பில் பென் டக்கெட் 95 மற்றும் வில் ஜேக்ஸ் 62 ரன்கள் எடுத்தனர்.

316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி விரட்டியது. கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். மார்ஷ் 10 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வந்த ஸ்மித் மற்றும் கிரீன், தலா 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் டிராவிஸ் ஹெட் பொறுப்புடன் ஆடினார்.

அவருடன் லபுஷேன் இணைந்து 148 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அது ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு உதவியது. 129 பந்துகளில் 154 ரன்கள் எடுத்தார் ஹெட். 20 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். லபுஷேன், 61 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். 44 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகளில் ஆஸி வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது. ஆட்ட நாயகன் விருதை டிராவிஸ் ஹெட் வென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in