Published : 05 Jun 2018 03:21 PM
Last Updated : 05 Jun 2018 03:21 PM

என் உடலில் உள்ள திறமையை விட ஏபி.டிவில்லியர்ஸ் சுண்டு விரலில் வைத்திருக்கும் திறமை அதிகம்: கிளென் மெக்ரா

கிளென் மெக்ரா சமீபத்தில் ஓய்வு பெற்ற தென் ஆப்பிரிக்க 360 டிகிரி பேட்ஸ்மன் ஏ.பி.டிவில்லியர்ஸ் குறித்து விதந்தோதியுள்ளார்.

ஏ.பி.டிவில்லியர்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறியதையடுத்து தென் ஆப்பிரிக்கா சென்று தன் ஓய்வை அறிவித்தார். அதாவது தனது இளம் குடும்பத்துக்கு தான் முக்கியம் என்றும் ஆற்றல் தீர்ந்து விட்டது, களைப்படைந்து விட்டேன் ஆதலால் ஓய்வு பெறுகிறேன் என்றும் தெரிவித்து ஓய்வு பெற்றார்.

இது தென் ஆப்பிரிக்காவின் உலகக்கோப்பைக் கனவுகளுக்கு பெரும் சிக்கலாக வந்து முடிந்துள்ளது, கிரிக்கெட் ரசிகர்களும் இவரது ஓய்வினால் அதிர்ச்சியும் சோகமும் அடைந்துள்ளனர்.

2007 உலகக்கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவின் 377 ரன்கள் இலக்கை விரட்டிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்கத்தில் கிரேம் ஸ்மித்துடன் இறங்கிய ஏ.பி.டிவில்லியர்ஸ், கிளென் மெக்ரா பந்து வீச வந்த போது தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளை விளாசினார், பிறகு மெக்ராவின் 5வது ஓவரில் 2 பவுண்டரிகளை அடித்தார். இந்த 5 பவுண்டரிகளும் மெக்ராவை வெறுப்பேற்றியது, சிலபல வார்த்தைகளை டிவில்லியர்ஸ் மீது ஏவினார் மெக்ரா. 21வது ஓவரில் டிவில்லியர்ஸ் ஆட்டமிழக்கும் போது ஸ்கோர் 160, டிவில்லியர்ஸ். 70 பந்துகளில் 14 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 92 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில் கிளென் மெக்ராவிடம் ஏ.பி.டிவில்லியர்ஸ் குறித்துக் கேட்ட போது,

“ஏபிடி ஒரு கிளாஸ் பிளேயர், இதில் எள்ளளவும் சந்தேகமில்லை. என்னுடைய உடல் முழுதும் உள்ள திறமையை விட அவர் சுண்டு விரலில் அதிக திறமையை வைத்திருக்கிறார். அவரை கிரிக்கெட் இழந்துள்ளது. அவர் இயற்கையாகவே திறமை மிக்க வீரர், அவரை நிச்சயமாக இழக்கிறோம்” என்றார்.

மேலும் சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் இறுதியில் சதம் அடித்த வாட்சன் பற்றியும் தோனி பற்றியும் கூறும் கிளென் மெக்ரா “2008 முதல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் வாட்சன் தலைமையில் கோப்பையை வென்றது. அவர் தரமான வீரர். இறுதிப்போட்டிக்காக தன் சிறந்த ஆட்டத்தை சேமித்து வைத்திருந்தார் போலும்.

இன்னும் கூட தான் சிறந்த வீரர் என்பதையும் தான் ஆர்வமாக உள்ளதையும் வாட்சன் காட்டியுள்ளார். எப்படி சிஎஸ்கே அணி எம்.எஸ்.தோனி தலைமையில் அந்த அணி ஒரு அணியாக சிறப்பாக விளங்குகிறதோ அதன் ஒரு அங்கமாக வாட்சனும் சிறந்து விளங்குகிறார்” என்றார் மெக்ரா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x