‘என் பயிற்சியாளர்தான் எனது வெற்றிக்கு காரணம்’ - பாரா தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு

இந்திய பாரா தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு | கோப்புப்படம்
இந்திய பாரா தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: அண்மையில் நிறைவடைந்த பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்றிருந்தார் இந்திய பாரா தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு. இந்தியா சார்பில் தொடர்ச்சியாக மூன்று பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

29 வயதான அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். ரியோவில் தங்கம், டோக்கியோவில் வெள்ளி மற்றும் பாரிஸில் வெண்கலம் வென்றுள்ளார்.

இந்தச் சூழலில் தடகள சாம்பியனான அவர் பதக்கம் வென்றது குறித்தும், தனக்கு கிடைத்த ஆதரவு குறித்தும் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு பகிர்ந்ததில் இருந்து… “உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் தங்கப் பதக்கத்தை இழந்தது எனக்கு இன்னும் வருத்தம் அளிக்கிறது. எப்படியோ அது எனது பாக்கெட்டில் இருந்து நழுவியதை போன்றதொரு உணர்வு. முறையான பயிற்சிக்கு பிறகே பாரிஸ் சென்றிருந்தேன். பிரதான போட்டிக்கு முன்பாக எனக்கு காய்ச்சல் ஏற்பட்டது. சிறப்பாக செயல்பட வேண்டுமென்ற பதற்றம் கூட அதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.

நான் களத்தில் சிறப்பாக செயல்பட தசைகளின் இயக்கம் இயல்பாக இருக்க வேண்டும். அன்றைய நாளில் தசை இயக்கத்திலும் எனக்கு சிக்கல் இருந்தது. அடுத்த பாராலிம்பிக்கில் நிச்சயம் நான் தங்கம் வெல்வேன்.

இதுவரை விளையாட்டு களத்தில் நான் படைத்துள்ள அனைத்து சாதனைகளுக்கும் என் பயிற்சியாளர் சத்யநாராயணா சார்தான் காரணம். நான் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டுமென்ற விருப்பத்தில் கடந்த 2015-ல் அவர்தான் என்னை பெங்களூரு அழைத்துச் சென்று பயிற்சி கொடுத்தார். அதை அவர் செய்யாமல் போயிருந்தால் பாராலிம்பிக்கில் அடுத்தடுத்து மூன்று பதக்கங்களை வென்ற சாதனையை என்னால் படைத்திருக்க முடியாது. நான் யார் என்று கூட யாருக்கும் தெரியாமல் போயிருக்கும். நான் அவருக்கு நிறைய கடமைப்பட்டிருக்கிறேன்” என மாரியப்பன் தங்கவேலு தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in