Published : 13 Jun 2018 09:44 AM
Last Updated : 13 Jun 2018 09:44 AM

கடும் சவாலை எதிர்நோக்கும் ஈரான்

உலகக் கோப்பை கால்பந்து தொடருக்குத் தகுதி பெற்றுள்ள ஈரான் அணி இந்த முறை கடுமையான சவால்களைச் சந்திக்கப் போகிறது. ஆசிய அளவிலான தகுதிச் சுற்று ஆட்டங்களில் அற்புதமாக விளையாடியது ஈரான். 8 ஆட்டங்களில் 6 வெற்றி, 2 டிராக்களுடன் 20 புள்ளிகளைப் பெற்று ரஷ்யாவுக்கு பயணமாகியுள்ளது. 26 கோல்களை அடித்த ஈரான் அணியினர், பதிலுக்கு 3 கோல்களை மட்டுமே வாங்கியிருந்தனர்.

உலகக் கோப்பையில் முதல் சுற்றே அந்த அணிக்கு கடும் சவால்களை கொடுத்துள்ளது. பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஈரான் அங்கு அசுர பலம் பொருந்திய போர்ச்சுக்கல், ஸ்பெயின், மொராக்கோ அணிகளுடன் மோத வேண்டியுள்ளது. எனவே அந்த அணி முதல் சுற்றைத் தாண்டுவதே கடினமான விஷயமாக இருக்கும் என்று கால்பந்து விமர்சகர்கள் கணித்துள்ளனர்.

ஆனாலும் ஈரானின் உலகக் கோப்பை கனவை நனவாக்கும் முயற்சியில் அலிரேசா ஜகான்பக்ஸ், சர்தார் அஸ்மோன், கேப்டன் அஷ்கான் தேஜாகா ஆகியோர் இறங்கவுள்ளனர். பயிற்சியாளர் குய்ரோஸ், அற்புதமான திட்டம் வகுத்ததால் தகுதிச் சுற்றில் சிறப்பாக விளையாடியது ஈரான். எனவே அந்த அணியின் களத் திட்டங்கள் வெற்றிகளுக்கு நிச்சயம் உதவும்.

ஸ்டிரைக்கர் சர்தார் அஸ்மோனின் அற்புதமான பந்தைக் கடத்தும் திறன், அதற்கு பக்கபலமாக இருக்கும் அலிரேசா ஜகான்பக்ஸ், கோல் அடிப்பதில் கிங் என்று புகழ்பெற்ற கேப்டன் அஷ்கான் ஆகியோர் அணிக்கு நிச்சயம் வெற்றியைத் தேடித் தருவார்கள் என்று நம்பப்படுகிறது. அணிக்குக் கூடுதல் பலமாக சமான் கோடோஸ், மெஹ்தி தரேமி, கரீம் அன்சாரிபர்ட் ஆகியோர் உள்ளனர்.

அந்த அணிக்கு பலவீனம் என்பது மிகப்பெரிய அணிகளுடன் சமீப காலமாக விளையாடாமல் இருப்பதேயாகும். இதனால் உலகக் கோப்பையில் அந்த அணி தனது திறமையை எப்படி வெளிப்படுத்தப் போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக அலிரேசா ஜகான்பக்ஸ் உள்ளார். அபாயகரமான நடுகள ஆட்டக்காரரான அலிரேசா, இதுவரை 38 சர்வதேச கோல்களை அடித்துள்ளார். தமாஷ் டெஹ்ரான், தமாஷ் கிலான், என்இசி அணிகளுக்காக ஆடிய அவர் தற்போது ஏஇசட் கிளப்புக்காகவும், ஈரான் தேசிய அணிக்காகவும் விளையாடி வருகிறார். இதுவரை 3 முறை ஆசியக் கோப்பைகளை ஈரான் கைப்பற்றியுள்ளது. 1978, 1998, 2006, 2014-க்குப் பிறகு 5-வது முறையாக உலகக் கோப்பைத் தொடரில் நுழைந்துள்ளது. ஆனால் ஒருமுறையும் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது கிடையாது. இந்த முறையாவது அந்த வாய்ப்பு அமையும் என்று காத்திருக்கிறார்கள் ஈரான் ரசிகர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x