19 வயதில் 150 கி.மீ வேகம்: ஆஸ்திரேலியாவின் புதிய தாம்சன் உருவாகிறார்!

மாலி பியர்ட்மேன்
மாலி பியர்ட்மேன்
Updated on
1 min read

19 வயதேயானாலும் இவர் வீசும் வேகம் மணிக்கு 150 கி.மீ வேகத்தை தொடுவதற்கு அருகில் உள்ளது என்று கிரிக்கெட் உலகை அதிசயிக்கச் செய்து வருகிறார். இப்போது இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பியர்ட்மேன் ஆஸ்திரேலிய சீனியர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பர்பாமன்ஸ் பிரமாதம் என்றால் பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இவர் அறிமுகமாவதை எதிர்பார்க்கலாம். ஆறு அடி இரண்டு அங்குலம் உயரம் கொண்ட இவர் பெனோனியில் நடைபெற்ற யு-19 உலகக் கோப்பை இறுதியில் இந்திய பேட்டர்களுக்கு கடுமையான சவால்களை அளித்து 3 விக்கெட்டுகளை 15 ரன்களுக்குக் கைப்பற்றி வெற்றிக்கு வித்திட்டதால் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

இந்தியாவின் ஸ்டார் பேட்டர் முஷீர் கானுக்கு பூச்சி பறப்பது போன்ற ஒரு பந்தை வீசி குச்சியைக் கழற்றினார். இந்திய அணியின் டாப் ஸ்கோரர் ஆதர்ஷ் சிங்கிற்கு இவர் வீசிய ஷார்ட் பிட்ச் 145 கி.மீ வேக பவுன்சர். அது இப்போது கூட ஆதர்ஷ் சிங்கிற்கு என்னவென்று புரியாத ரக வேகப்பந்து வீச்சாகும். இவரோடு காலம் விட்லர், சார்லி ஆண்டர்சன், டாம் ஸ்ட்ரேக்கர் போன்ற பவுலர்கள் இதே அளவு ஆக்ரோஷத்துடன் வீசி வருகின்றனர். விரைவில் ஆஸ்திரேலிய அணி 1980-களின் மேற்கு இந்தியத் தீவுகள் போல் 4 அதிவேகப்பந்து வீச்சாளர்களைக் களமிறக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மாலி பியர்ட்மேன் 150 கி.மீ வேகத்தை விரைவில் எட்டி விடுவேன் என்று உறுதி கூறுகிறார். அது தனக்கொன்றும் பெரிய விஷயமல்ல என்கிறார். யு-19 உலகக் கோப்பையில் இவர் வீசிய வேகம் 150 கி.மீ ஆகக் கூட இருந்திருக்கலாம் என்றே நிபுணர்கள் கருதுகின்றனர். மிட்செல் ஜான்சன் தான் இவரது மானசீக குரு. அவரைப் போலவே விக்கெட் விழுந்தவுடன் கொண்டாடுகிறார் மேனரிசம் அவரைப் போலவே உள்ளது. இவரது குருநாதர் டெனிஸ் லில்லி. பியர்ட்மேனுக்கு 14-15 வயது முதலே டெனிஸ் லில்லி பயிற்சி அளித்து வருகிறார். ஆஸ்திரேலியாவில் இன்னொரு தாம்சன் உருவாகி வருகிறார் என்பதே அங்கு கிரிக்கெட் வட்டாரங்களில் பேச்சாக இருந்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in