Last Updated : 13 Jun, 2018 09:43 AM

 

Published : 13 Jun 2018 09:43 AM
Last Updated : 13 Jun 2018 09:43 AM

திறமை வாய்ந்த பெல்ஜியம்

பெல்ஜியம் அணி உலகக் கோப்பை தொடரில் 13-வது முறையாக கலந்து கொள்கிறது. 1986-ம் ஆண்டு தொடரில் 4-வது இடத்தை பிடித்ததே அந்த அணியின் அதிகபட்ச சாதனையாக உள்ளது. தகுதி சுற்றில் ஐரோப்பிய கண்டங்களில் ஹெச் பிரிவில் இடம் பெற்ற பெல்ஜியம் 10 ஆட்டங்களில் 9-ல் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியது. ஒரு ஆட்டத்தை டிரா செய்திருந்தது.

ரெட் டெவில்ஸ் என செல்லமாக அழைக்கப்படும் பெல்ஜியம் அணி தகுதி சுற்றில் 43 கோல்களை அடித்த நிலையில் வெறும் 6 கோல்களை மட்டுமே வாங்கியது. அதிகபட்சமாக ரோமலு லகாகு 11 கோல்கள் அடித்திருந்தார். கேப்டன் ஈடன் ஹஸார்டு 6 கோல்கள் அடித்த நிலையில், 5 கோல்கள் அடிக்க உதவி புரிந்தார்.

பெல்ஜியம் அணி அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. கோல்கீப்பராக திபட் கோர்டோஸ் பலம் சேர்க்கிறார். ஜான் வெர்டோகன், டோபி ஆல்டர்வெர்ல்ட், வின்சென்ட் கோம்பனி ஆகியோர் டிபன்ஸிலும், மவுஸா டெம்பிளே, ராட்ஜா நாயிங்கோலன், கெவின் டி புருனே ஆகியோர் சென்ட்ரல் மிட்பீல்டிலும் வலு சேர்க்கின்றனர். கெவின் டி புருனே, இந்த சீசனில் மான்செஸ்டர் அணிக்காக 8 கோல்கள் அடித்திருந்தார். மேலும் 15 கோல்கள் அடிக்க உதவி புரிந்திருந்தார்.

ஹஸார்டு, டிரஸ் மெர்டன்ஸ் ஆகியோர் தலைசிறந்த விங்கர்களாக உள்ளனர். இவர்கள் முன்களத்திலும் சிறந்த திறனை வெளிப்படுத்தக்கூடியவர்கள். ஸ்டிரைக்கரான ரோமலு லகாகு, இந்த சீசனில் பிரிமீயர் லீக் தொடரில் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தார். இம்முறை அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள்தான் கடந்த 2014 உலகக் கோப்பை தொடரிலும், 2016-ம் ஆண்டு யூரோ கோப்பையிலும் விளையாடினார்கள். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு சிறந்த திறனை அவர்கள் வெளிப்படுத்தவில்லை.

வெற்றிக்கான மனப்பாங்கும், வியூகங்களும் இல்லாதது நட்சத்திர வீரர்களையே ஏமாற்றம் அடையச் செய்தது. இதனால் இம்முறை உயர்மட்ட அளவிலான ஆட்டத்தை விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் பெல்ஜியம் வீரர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x