Published : 16 Jun 2018 03:31 PM
Last Updated : 16 Jun 2018 03:31 PM

அனைத்துக் கால கிரேட்டஸ்ட் கோல் ஸ்கோரர்: ரொனால்டோவுக்கு குவியும் ட்விட்டர் புகழாரங்கள்

கடினமான ஸ்பெயின் அணிக்கு எதிராக உலகக்கோப்பை பி பிரிவு ஆட்டத்தில் ஹாட்ரிக் சாதனையுடன் ட்ரா செய்த ரொனால்டோவுக்கு பலரும் புகழாரம் சூட்டியுள்ளனர்.

போர்ச்சுக்கல், ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் த்ரில்லராக மாறி கடைசிக் கட்டம் வரைக்கும் விறுவிறுப்பு குறையாமல் சென்று கடைசியில் 3-3 என்று ட்ரா ஆனது.

முதலில் பந்தை வேகமாக உள்ளே எடுத்துச் சென்ற போது நாச்சோ அவருக்கு கால்தட்டுப் போட பெனால்டி கிக் கோல் கீப்பர் டி ஜியா இங்கும் அங்கும் அலைந்து இவரைக் குழப்பப் பார்க்க அசையாமல் வேடிக்கைப் பார்த்த ரொனால்டோ கடைசியில் சீ.. போ என்று வலையின் வலப்புறத்தில் கோல் அடித்தார்.

2வது கோல் ரொனால்டோ போன்ற தன்னம்பிக்கை வீரர்களால்தான் அடிக்க முடியும். ஸ்பெயின் உச்சத்தில் இருந்த நேரத்தில் பாஸ் ஒன்று எதேச்சையாக இவரிடம் சிக்க வெகு விரைவில் எடுத்து சென்று பிறகு பாஸ் செய்து பிறகு பாஸை மீண்டும் பெற்று கோ அடித்தார், இதில் கோல் கீப்பர் டி ஜியாவின் தவறும் இருந்தது.

பிறகு கடைசியில் ஆட்டம் 2-3 என்று கையை விட்டு போன நிலையில் 25 அடி ஃப்ரீ கிக் அப்பழுக்கில்லாத கோலாக ஹாட்ரிக்குடன் ஸ்பெயின் வெற்றிக் கனவையும் தகர்த்தார்.

இந்நிலையில் ட்விட்டரில் பாராட்டு குவிந்து வருகிறது:

முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் வீரர் ரியோ பெர்டினாண்ட் “எனக்கு மூச்சு நின்றது, ரொனால்டோ உலகக்கோப்பை ஆட்டத்தில் செய்த இந்தக் காரியம் சட்டவிரோதம்” என்று புகழ்ந்துள்ளார்.

முன்னால் அமெரிக்க கால்பந்து அணியின் வீரர் லேண்டன் டோனவன் கொஞ்சம் சுய-எள்ளல் தொனியுடன் “2 மணி நேரங்களுக்கு முன்னால் நான் உலகக் கோப்பையில் ரொனால்டோவை விட நான் அதிக கோல்கள் அடித்தவனாக இருந்தேன். பிறகு பார்த்தால் ஹாட்ரிக் எடுத்துவிட்டார்!!” என்று பதிவிட்டுள்ளார்.

ரியல் மேட்ரிடின் ரஃபேல் வான் டெர் வார்ட், “கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஃப்ரீ கிக்குகள் பற்றி உங்களுக்குக் கூறுகிறேன், “அப்படித்தான் நானும் அடிப்பேன்”

முன்னாள் பார்முலா ஒன் ஸ்டார் நிகோ ரோஸ்பர்க் தன் ட்விட்டர் பக்கத்தில் "wow wow wow." என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

முன்னாள் லிவர்பூல் அணி வீரர் ஜேமி கேரகர், “அனைத்து கால கிரேட்டஸ்ட் கோல் ஸ்கோரர்” என்று ரத்தினச் சுருக்கமாக ரொனால்டோவின் மகாத்திறமையைப் புகழ்ந்தார்.

பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல், “ரொனால்டோ தன் சிறப்பான ஆட்டத்தில் மீண்டும், பிரில்லியண்ட்” என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x