Last Updated : 11 Jun, 2018 09:10 PM

 

Published : 11 Jun 2018 09:10 PM
Last Updated : 11 Jun 2018 09:10 PM

ஆப்கன் டெஸ்ட்: உடற்தகுதித் தேர்வில் முகமது ஷமி தோல்வி; புதுமுக வீரர் சேர்ப்பு

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி உடற்தகுதித் தேர்வில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வரும் 14-ம் தேதி தொடங்க உள்ள டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

முகமது ஷமிக்கு பதிலாக டெல்லியைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் ஷைனி அறிமுகமாகிறார். ரஞ்சி கோப்பைப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு நவ்தீப் ஷைனி பந்து வீசியுள்ளதால், அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், இந்திய ஏ அணி அடுத்த மாதம் இங்கிலாந்து பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அந்த அணியிலும் நவ்தீப் ஷைனி இடம் பெற்றுள்ளார். இதுவரை 31 முதல்தரப்போட்டிகளில் விளையாடியுள்ள ஷைனி 96 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

காயம் காரணமாகவும் அவதிப்பட்டு வந்த முகமது ஷமி உடற்தகுதித் தேர்வில் 16.5 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளார், அதேசமயம், கருண் நாயர், ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டு 18 மதிப்பெண்களுக்கும் அதிகமாகப் பெற்றுள்ளனர்.

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பிசிசிஐயின் ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட ஷமி, அதன்பின் மீண்டும் சேர்க்கப்பட்டார். ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமான பந்துவீச்சை முகமது ஷமி வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ், ராஜ்னீஷ் குர்பானி ஆகியோர் இந்திய அணியோடு வலைப்பயிற்சியில் ஈடுபட வருமாறு இந்திய அணி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கிடையே இங்கிலாந்து செல்லும் இந்திய ஏ அணியில் இடம் பெறும் வீரர்களுக்கான உடற்தகுதித் தேர்வில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்ஸன் தோல்வி அடைந்தார். இதனால், அவருக்குப் பதிலாக 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் கேப்டன் இஷான் கிஷான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x