Last Updated : 01 Jun, 2018 12:24 PM

 

Published : 01 Jun 2018 12:24 PM
Last Updated : 01 Jun 2018 12:24 PM

பிசிசிஐ அமைப்புக்கு ரூ.121 கோடி அபராதம்: ஸ்ரீனிவாசனுக்கு ரூ.11 கோடி: அமலாக்கப்பிரிவு அதிரடி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு(பிசிசிஐ) ரூ. 121 கோடி அபராதம் விதித்து அமலாக்கப்பிரிவு இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2009-ம் ஆண்டு ஐபிஎல் போட்டி நடத்தப்பட்டது. அப்போது, அன்னியச் செலாவணி பரிமாற்ற மேலமாண்மைச் சட்டத்தை(பெமா) மீறி ரூ.243 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டி நடத்தப்பட்டது. 2-வது ஆண்டு ஐபிஎல் போட்டி 2009-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதம் நடக்கும் போது, அப்போது மக்களவைத் தேர்தலும் நடத்தப்பட இருந்தது.

இதனால், ஐபிஎல் போட்டிக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தரமுடியாது என மாநில அரசுகள் கைவிரித்துவிட்டன. இதனால், வேறுவழியின்றி, அந்த ஒரு ஆண்டு மட்டும் ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்டன.

2-வது ஆண்டு ஐபிஎல் போட்டியை தென் ஆப்பிரிக்காவில் நடத்தும் போது, அதற்கான பணம் முழுவதையும் பிசிசிஐ அமைப்புதான் அளித்தது. இந்தப் போட்டிகளுக்கான பணப்பரிமாற்றத்தின் போதுதான் விதிமீறல் நடந்துள்ளதை அமலாக்கப்பிரிவு கண்டுபிடித்துள்ளது.

இதையடுத்து, பிசிசிஐ அமைப்பின் முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசனுக்கு ரூ.11.53 கோடி, ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு ரூ.10.65 கோடி, பிசிசிஐ அமைப்பின் முன்னாள் பொருளாளர் எம்.பி. பாண்டோவ்க்கு ரூ.9.72 கோடி, ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் ரூ.7 கோடி, தலைமை மேலாளருக்கு ரூ.10 லட்சம் , பிசிசிஐ அமைப்புக்கு ரூ.82.66 கோடி என மொத்தம் ரூ.121.56 கோடி அபராதம் விதித்துள்ளது அமலாக்கப்பிரிவு.

இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், அன்னியச் செலாவணி பரிமாற்றத் தடைச்சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 2009-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.243 கோடியை பிசிசிஐ சட்டத்துக்கு புறம்பாகப் பரிமாற்றம் செய்துள்ளது. இந்த பணத்தை பரிமாற்றம் செய்வதற்காக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்குத் தனியாக வங்கியில் புதிதாகக் கணக்கு தொடங்கப்பட்டு, அங்கிருந்து பணம் பரிமாறப்பட்டுள்ளது.

அதன் பின் இரு கிரிக்கெட் வாரியங்களுக்கும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அன்னிய வங்கியில் செலுத்தப்பட்ட பணம் முழுவதையும் கையாளும் அதிகாரம் பிசிசிஐ அமைப்புக்கு வழங்கப்பட்டு இருந்தது. இதன்படி பிசிசிஐ அதிகாரிகளே அனைத்துச் செலவுகளையும் செய்துள்ளனர் எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x