Last Updated : 05 Jun, 2018 09:28 AM

 

Published : 05 Jun 2018 09:28 AM
Last Updated : 05 Jun 2018 09:28 AM

அரும்பாடுபட்ட ஆஸ்திரேலியா

ஸ்திரேலிய அணி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறுவது இது 4-வது முறையாகும். அந்த அணி 1974-ல் ஜெர்மனியில் நடைபெற்ற கால்பந்து தொடரில் முதன்முறையாக விளையாடியது. அந்தத் தொடரில் முதல் சுற்றுடன் வெளியேறிய ஆஸ்திரேலிய அணி அதன் பின்னர் 32 வருடங்களுக்கு பிறகு 2006-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரில் விளையாடுவதற்கு தகுதி பெற்றது. ஜெர்மனியில் நடைபெற்ற இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணி நாக் அவுட் சுற்றுவரை முன்னேறியது. அந்தத் தொடரில் பலம் வாய்ந்த இத்தாலியுடன் மோதி 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டு ஆஸ்திரேலிய அணி வெளியேறியிருந்தது. இதன் பின்னர் 2010 மற்றும் 2014-ம் ஆண்டு தொடரில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் சுற்றுடன் மூட்டை கட்டியிருந்தது.

இம்முறை உலகக் கோப்பை தொடருக்கு படாதபாடுபட்டே ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றுள்ளது. ஆசிய அளவிலான தகுதிச் சுற்று போட்டியில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்திருந்த ஆஸ்ரேலியா 3-வது இடத்தையே பிடித்திருந்தது. இதனால் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறுவதற்கு இரு பிளே ஆஃப் ஆட்டங்களில் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இதில் சிரியா அணியை 2-1 என்ற கோல் கணக்கிலும், ஹோண்டூராஸ் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ரஷ்ய உலகக் கோப்பைக்கு தொடருக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலிய அணி. சிரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டிம் காஹில் இரு கோல்களை அடித்த நிலையில் ஹோண்டூராஸ் அணிக்கு எதிராக கேப்டன் மைல் ஜெடினக் ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்தியிருந்தார்.

ஹோண்டூராஸ் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்ற உடனேயே பயிற்சியாளராக இருந்த போஸ்ட்கோக்ளோ தனது பதவியை ராஜினாமா செய்தார். தகுதிச் சுற்று ஆட்டங்களின் போது கள யுத்தியில் போஸ்ட்கோக்ளோ, சென்ட்ரல் டிபன்ஸில் 3 வீரர்களை பயன்படுத்தினார். இந்த வியூகத்தை தகவமைத்துக் கொண்டு விளையாடுவதில் ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாற்றம் கண்டனர். ஆசிய கண்டத்தில் இருந்து எளிதாக தகுதி வாய்ப்பிருந்ததும் ஆஸ்திரேலிய அணி நெருக்கடியை சந்தித்ததற்கு இதுவே காரணம் என கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதன் காரணமாகவே போஸ்ட்கோக்ளோ பதவியில் இருந்து விலக நேரிட்டது.

இதன் பின்னர் இடைக்கால பயிற்சியாளராக பெர்ட் வான் மார்விஜ் நியமிக்கப்பட்டார். அவரது பயிற்சியின் கீழ்தான் ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பை தொடரை சந்திக்கிறது. வான் மார்விஜ் பொறுப்பேற்ற பின்னர் ஆஸ்திரேலிய அணி நட்புரீதியிலான ஆட்டத்தில் 1-4 என்ற கோல் கணக்கில் நார்வே அணியிடம் தோல்வி கண்டது. அதன் பின்னர் கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தை கோல்களின்றி டிரா செய்திருந்தது.

இது குறித்து வான் மார்விஜ் கூறும்போது, “நான் மந்திரவாதி ஒன்றும் இல்லை. இரண்டே நாட்களில் அணி வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் அனைத்தையும் கற்றுக் கொடுத்துவிட முடியாது. நிறைய நேரம் செலவாகும். தற்போது துருக்கியில் 4 வார காலங்கள் தீவிர பயிற்சி எடுத்து வருகிறாம். உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இரு பயிற்சி ஆட்டங்கள் போதுமானது. என்னை பொறுத்தவரையில் முதல் சுற்றை கடந்தாலே மகிழ்ச்சியடைவேன். அதை செய்ய முடியாவிட்டால் நான் என்னை நிலைப்படுத்திக் கொள்ள முடியாது. நான் ஒரு யதார்த்தவாதி, அதேவேளையில் சிறிது நம்பிக்கையும் கொண்டவன். சிறந்த திறனை வெளிப்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதேவேளையில் அழுத்தம் அதிகமாக இருந்துவிடக்கூடாது. அழுத் தம் இல்லாமல் சிறந்த திறனை வெளிப்படுத்தவும் முடியாது” என்றார்.

ரஷ்ய உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி கடினமான ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் பலம் வாய்ந்த பிரான்ஸ், டென்மார்க், பெரு அணிகள் இடம் பிடித்துள்ளன. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பெரும்பாலானோர் ஐரோப்பா மற்றும் ஆசிய அளவில் நடைபெறும் தொழில் ரீதியிலான கால்பந்து தொடர்களில் விளையாடிய அனுபவத்தை கொண்டுள்ளனர். நடுகள வீரரான ஆரோன் மூய், கோல்கீப்பர் மேம் ரேயான், டாம் ரோஜிக், 38 வயதான டாம் காஹில், கேப்டன் மைல் ஜெடினக், இளம் வீரர்களான டேனியல் அர்ஸானி, பிரான் கார்சிக் ஆகியோரை ஆஸ்திரேலிய பெரிதும் நம்பியுள்ளது. இவர்களில் டாம் காஹில் தகுதி சுற்று ஆட்டங்களில் 11 கோல்கள் அடித்து அசத்தியிருந்தார். தலையால் முட்டி கோல் அடிப்பதில் பிரபலம் வாய்ந்த அவர், இம்முறை சிறந்த பங்களிப்பை வழங்கக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x