

ராவல்பிண்டி: ராவல்பிண்டியில் நடைபெறும் பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியின் முன்றாம் நாளான நேற்று வங்கதேச அணி 6 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் என்ற நிலையிலிருந்து 262 ரன்கள் வரை வந்ததற்குக் காரணம், லிட்டன் தாஸ் (138) மெஹதி ஹசன் மிராஸ் (78) மற்றும் ஸ்கோர் சிறிதானாலும் பெரிய பங்களிப்பான ஹசன் மஹமூதுவின் 11 ரன்கள் என்றே சொல்ல வேண்டும்.
பாகிஸ்தானின் குர்ரம் ஷஜாத் மற்றும் மிர் ஹம்சா மிரட்டலாக வீசியதில் வங்கதேச பேட்ஸ்மேன்கள் ஷத்மன் இஸ்லாம், ஜாகிர் ஹுசைன், நஜ்முல் ஹுசைன் ஷாண்ட்டோ, மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹிம், ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்து வரிசையாக மார்ச்ஃபாஸ்ட் செய்ய 26 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. என்ற நிலையில் அவர்களது மிகக்குறைந்த டெஸ்ட் இன்னிங்ஸ் ஸ்கோரான 43 ரன்களும் வராதோ என்ற அச்சம் நிலவியது.
அப்போதுதான் லிட்டன் தாஸும், ஆல்ரவுண்டர் மெஹதி ஹசன் மிராசும் இணைந்தனர். 165 ரன்கள் கூட்டணி அமைத்தனர், லிட்டன் தாஸின் இன்னிங்ஸ் ஆச்சரியங்களில் ஒன்று என்ற வகையைச் சேர்ந்தது. மெஹதி ஹசன் ஆட்டமிழந்த பிறகு நம்பர் 10 வீரர் ஹசன் மஹமூத் மிக அருமையாக தன் தடுப்பாட்டத்தை ஆடினார். கடந்த டெஸ்ட்டில் ஒதுங்கி ஒதுங்கி, பயந்து பயந்து ஆடிய இவர் திடீரென ஒரே டெஸ்ட்டில் இப்படி தடுப்பாட்டத்தின் ‘வீர தீர நம்பர் 10’ ஆக மாறுவார் என்று பாகிஸ்தான் எதிர்பார்க்கவில்லை. இந்தப் பார்ட்னர்ஷிப் 69 ரன்களை வங்கதேசத்துக்குப் பெற்றுத்தந்தது என்பதோடு லிட்டனும் இவரும் சுமார் 2 மணி நேரம், அதாவது 149 பந்துகள் கிட்டத்தட்ட 25 ஓவர்கள் பாகிஸ்தானை வெறுப்பேற்றி அவர்களுக்கு ஏறக்குறைய கிரிக்கெட்டின் நரகத்தையே காட்டி விட்டனர் என்றுதான் கூற வேண்டும்.
லிட்டனும் மெஹதி ஹசன் மிராசும் உணவு இடைவேளை வரை மேலும் சேதமில்லாமல் கொண்டு சென்றனர். ஆனால் இடைவேளைக்குப் பிறகு லிட்டன் தாஸ் ஆக்ரோஷப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 274 ரன்களுக்கு சுமார் 200 ரன்கள் பின்னாலிருந்த வங்கதேசத்தை தன் நம்பமுடியாத சதத்தின் மூலம் மீட்டார், ஷஜாத் பந்து வீச்சை உணவு இடைவேளைக்குப் பிறகு பதம் பார்த்தார். 5 பவுண்டரிகளை சடுதியில் ஷஜாத்தை மட்டும் விளாசினார். உணவு இடைவேளைக்குப் பிறகு வங்கதேசம் 6 ஓவர்களில் 40 ரன்களை விளாசியது. மெஹதியும், லிட்டனும் 100 ரன்கள் கூட்டணி அமைத்தனர்.
லிட்டன், மெஹதி இருவரும் அரைசதம் கடந்தனர். மெஹதியின் 8-வது டெஸ்ட் அரைசதமாகும் இது. பாகிஸ்தான், வங்கதேசத்தை எழும்ப விட்டதற்குக் காரணம் மோசமான கேப்டன்சிதான். ஷஜாத்தை ஷார்ட் பிட்ச் பந்து வீசுமாறு கள வியூகம் அமைத்து பவுன்சர்களை வீசிப்பார்த்தார். ஆனால், இருவரும் புல், ஹூக் ஷாட்களை அருமையாக ஆடி அந்த சோதனையைக் கடந்தனர். மாறாக பாகிஸ்தான் தன் ஆதிக்கத்தைக் கோட்டை விட்டது அல்லது வங்கதேச ஆதிக்கத்திற்கு தாரை வார்த்தது. முதல் 7 ஓவர்களில் 15 ரன்களைக் கொடுத்திருந்த ஷஜாத் அடுத்த 6 ஓவர்களில் 58 ரன்களை வாரி வழங்கினார்.
மெஹதி ஹசன் 78 ரன்களில் 12 பவுண்டரி ஒரு சிக்சரை விளாசி குர்ரம் ஷஜாத் பவுலிங்கில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேற டஸ்கின் அகமதுவையும் குர்ரம் எல்.பி.செய்ய 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் என்ற நிலையில் லிட்டன் தாஸும் நம்பர் 10 வீரர் ஹசன் மஹமூதுவும் இணைந்தனர். லிட்டன் பிரமாதமாக ஸ்டரைக்கைத் தக்கவைத்துக் கொண்டு ஹசன் மஹமூதுவுக்கு சில பந்துகளையே ஆடக்கொடுத்தார், ஆனால் அந்தப் பந்துகளை ஹசன் பலரும் அசரும்படியாக தடுத்தாடினார். ஸ்கோர் 262 ரன்கள் வந்த போது லிட்டன் அவுட் ஆக, வங்கதேசமும் 262 ரன்கள் வரை வந்து பாகிஸ்தானுக்கு வெறும் 12 ரன்களை மட்டுமே முன்னிலை கொடுத்தது.
தற்போது பாகிஸ்தான் தன் 2வது இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 184 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்று தோல்வியின் பிடியில் தவித்து வருகிறது.