“ஜோ ரூட் ஒரு ஜீனியஸ்” - அலைஸ்டர் குக் புகழாரம்

“ஜோ ரூட் ஒரு ஜீனியஸ்” - அலைஸ்டர் குக் புகழாரம்
Updated on
1 min read

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ஜோ ரூட்டை ஜீனியஸ் என புகழ்ந்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலைஸ்டர் குக்.

இலங்கை அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் பதிவு செய்தார் ரூட். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிக சதம் பதிவு செய்த வீரர் என்று சாதனையை அவர் படைத்தார். மொத்தமாக 34 டெஸ்ட் சதங்களை பதிவு செய்துள்ளார். முன்பு இந்த சாதனை அலைஸ்டர் குக் (33 டெஸ்ட் சதங்கள்) வசம் இருந்தது. அதை ரூட் தகர்த்துள்ளார்.

“இங்கிலாந்தின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன். அவர் வசம் இந்த சாதனை இருப்பதுதான் சரியானதாக இருக்கும். அவர் ஒரு ஜீனியஸ். தொடர்ந்து ரன் குவித்து வருகிறார். அவரைப் போன்ற ஒரு வீரரை நான் பார்த்தது இல்லை. அவர் அபார ஃபார்மில் உள்ளார். அவரது ஆட்டத்தை பார்ப்பதே மகிழ்ச்சி தரும்.

லிஸ்ட்-ஏ போட்டிகளில் அவருடன் விளையாடி உள்ளேன். அந்நேரத்தில் எல்லோரும் அவரை சிறந்த ஆட்டக்காரர் என்றார்கள். அப்போது நான் அவரை அப்படி பார்க்கவில்லை. 2012-ல் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இந்திய அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் ஆட்டம் இரண்டு பக்கமும் சமமாக இருந்தது. அதில் அவர் முதல் சில பந்துகளை எதிர்கொண்ட போதே கிரிக்கெட் களத்தில் அவர் நீண்ட நாள் விளையாடுவார் என்பதை என்னால் அறிய முடிந்தது. நிச்சயம் 10,000 ரன்களை அவர் குவிப்பார் என நான் சொன்னேன்” என குக் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 145 போட்டிகளில் 265 இன்னிங்ஸ் ஆடியுள்ள ஜோ ரூட், 12377 ரன்கள் எடுத்துள்ளார். 64 அரைசதம் மற்றும் 34 சதங்கள் பதிவு செய்துள்ளார். 33 வயதான அவர் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 50 சதங்களை பதிவு எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in