Published : 19 Jun 2018 08:28 PM
Last Updated : 19 Jun 2018 08:28 PM

மயங்க் அகர்வால் 151, பிரிதிவி ஷா 132 ரன் விளாசல்: இங்கிலாந்தில் சாதனை ரன்குவிப்பில் இந்தியா ஏ

இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா ஏ அணி லெய்செஸ்டர் ஷயர் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் சாதனை ரன் குவிப்புச் செய்துள்ளது. மயங்க் அகர்வால் 151 ரன்களையும் பிரிதிவி ஷா 132 ரன்களையும் குவிக்க இந்தியா ஏ 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 458 ரன்களைக் குவித்தது.

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இந்தியா ஏ 2வது அதிகபட்ச ரன்களை இன்னிங்ஸில் குவித்து சாதனை புரிந்துள்ளது. 2007ம் ஆண்டில் சரே அணி இதே 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 496 ரன்கள் குவித்ததே லிஸ்ட் ஏ உலக சாதனையாக இருந்து வருகிறது.

மயங்க் அகர்வால் 106 பந்துகளில் 18 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 151 ரன்களைக் குவித்தார். 39 ஓவர்களுக்குப் பிறகு இவர் ரிட்டையர்ட் ஆனார். இவருடன் தொடக்கத்தில் இறங்கிய, சச்சின் டெண்டுல்கர் பேட்டிங்கை நினைவூட்டும் பிரிதிவி ஷா 90 பந்துகளில் 132 ரன்களை 20 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் விளாசித்தள்ளினார்.

இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்காக 26 ஓவர்களில் 221 ரன்களைக் குவித்தனர். நாட்டிங்கம் ஷயர் எடுத்த 445 ரன்கள் என்ற சாதனையை இந்தியா ஏ முறியடித்தது. இவர்களுடன் யு-19 உலகக்கோப்பை நாயகனான ஷுப்மன் கில் 7 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 54 பந்துகளில் 86 ரன்கள் விளாசினார். ஹூடா 38 ரன்களை எடுக்க ரிஷப் பந்த் 13 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.

ஷுப்மன் கில், ஆஃப் ஸ்பின்னர் ஆடில் அலி வீசிய 42வது ஓவரில் 4 சிக்சர்களைத் தொடர்ச்சியாக விளாசியது பேசுபொருளாகியுள்ளது. கடைசி 10 ஓவர்களில் 105 ரன்கள் குவிக்கப்பட்டது.

லீசெஸ்டர் ஷயர் அணியின் கேப்டன் டி.ஜே.வெல்ஸ் சுமார் 7 பவுலர்களைப் பயன்படுத்தினார், இதில் ஆர்.ஏ.ஜோன்ஸ் என்ற பவுலர் மட்டுமே குறைந்த பட்சமாக 10 ஓவர்களில் 68 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஏ.ஜாவித் என்ற பவுலர் 10 ஓவர்களில் 91 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

லீஷயர் அணி 7.4 ஓவர்களில் 44/0 என்று ஆடிவருகிறது. இந்தியா ஏ அணி லிஸ்ட் ஏ சாதனை புரிந்துள்ளதுதான் விஷயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x