

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களைச் சந்தித்தார் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா.
"காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய ராணுவ வீரர்களை கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சந்தித்தார். எல்லையில் கடினமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு இவரது வருகை பெரும் உற்சாகம் அளித்துள்ளது” என்று இந்திய ராணுவச் செய்தித் தொடர்பாளர் கலோனல் என்.என்.ஜோஷி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, “எல்லையில் ராணுவ வீரர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து அவர்களுடன் உரையாடித் தெரிந்து கொண்டு நெகிழ்ந்தார் சுரேஷ் ரெய்னா, மேலும் அவர்களது சாதனைகளை கைதட்டி ரெய்னா வரவேற்றார்” என்றார்.
ரெய்னாவும் சுவையான சில சொந்த அனுபவங்களை ராணுவ வீரர்களுடன் பகிர்ந்து கொண்டார். அவர்களுடன் உணவு அருந்திய ரெய்னா அவர்களது சமையல் அறிவையும் விதந்தோதியுள்ளதாக கலோனல் என்.என்.ஜோஷி தெரிவித்தார்.
சுரேஷ் ரெய்னா அனந்த்நாக் மாவட்டத்தின் காஷ்மீரி பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனாலும் அவர் ஜம்மு காஷ்மீர் அணிக்கு ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.