Published : 01 May 2018 09:40 AM
Last Updated : 01 May 2018 09:40 AM

தோனி, வாட்சன் பவர் பேட்டிங்கினால் வென்று சிஎஸ்கே முதலிடம்; தோனியைக் கடுப்பேத்திய ரிஷப் பண்ட், விஜய் சங்கரின் கலக்கல் அதிரடி

புனேயில் நடைபெற்ற ஐபிஎல் 2018-ன் 30வது போட்டியில் வாட்சன், தோனி ஆகியோர் பேட்டிங்கில் தீபங்களை ஏற்ற 211 ரன்கள் குவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் பிற்பாடு டெல்லியின் ரிஷப் பண்ட், விஜய் சங்கர் காட்டடியில் மிரண்டது, தோனி கடுப்பானார். கடைசியில் போராடி வென்று முதலிடம் பிடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

டாஸ் வென்ற ஷ்ரேயஸ் அய்யர் மவுட்டிகமாக சென்னையை முதலில் பேட் செய்ய அழைத்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அதிரடி நாயகர்கள் வாட்சன், தோனிக்கு லைஃப்! உஷ்.. கண்டுக்காதீங்க!

ஷேன் வாட்சன் ஸ்ட்ரைக்கை எடுக்க, டெல்லி அணியின் ட்ரெண்ட் போல்ட் முதல் பந்தை வீசினார் மிக அருமையான ஒரு அக்ரம் ரக இன்ஸ்விங்கர் கால்காப்பில் நேராக வாங்கினார் ஷேன் வாட்சன், நடுவர் நாட் அவுட் என்று அடம் பிடிக்க, ஷ்ரேயஸ் அய்யர் ரிவியூ கேட்டார். முழங்காலுக்குக் கீழ் வாங்கினார், இது போல் அவர் தன் கிரிக்கெட் கரியரில் சிலபல முறை ஆட்டமிழந்துள்ளார்... ஆனால் நம் நடுவருக்கு இது நாட் அவுட். பால் ட்ராக்கரில் 3 சிகப்புகள் காண்பிக்கப்பட்டது. மூன்றாவது கண்ணுக்கும் அவுட்டாகத் தெரியவில்லை, பந்து முதலில் பேடில் பட்டதா பேட்டில் பட்டதா என்பதில் சந்தேகம் இருந்ததாகக் கூறப்படுகிறது, களநடுவருக்கு சந்தேகம் ஓகே. 3வது நடுவருக்கு எப்படி சந்தேகம் வரும். சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மெனுக்கு அளிப்பது கிரிக்கெட் மரபு எனலாம், ஆனால் சந்தேகத்தின் பலனை களநடுவருக்குச் சாதகமாக்கியது எப்படி? அப்படியென்றால் என்ன? உஷ்... கண்டுக்காதீங்க!

அதே போல் தோனி 19வது ஓவரின் முதல் பந்தில் கொடுத்த எளிதான கேட்சை கொலின் மன்ரோ கோட்டை விட்டார். ஆவேஷ் கான் வீசிய வேகப்பந்துக்கு தோனி புல்ஷாட்டை சரியாக ஆடவில்லை. இடது புறம் லேசாக நகர்ந்த மன்ரோ கேட்சை விட்டார். (உஷ் கண்டுக்காதீங்க!). தோனி அப்போது 31 ரன்களில் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடைசி ஓவர் 5வது பந்தில் மீண்டும் போல்ட் பந்தை தோனி மீண்டும் சரியாக புல் ஷாட் ஆடவில்லை கிளவ்வில் பட்டு ரிஷப் பண்ட்டிடம் சென்றது, இவரும் விட்டார். அந்தப் பந்தில்தான் ராயுடு தடதடவென ஓடி வந்து தோனியின் அருகில் நின்று ரன் அவுட் ஆனது வேறு கதை.

நாட் அவுட்டுக்குப் பிறகு வெளுத்துக் கட்டிய ஷேன் வாட்சன்

ராயுடு எந்த டவுனிலும் ஆடுகிறார் என்பதால் டுபிளெசிஸ், வாட்சன் இறங்கினர். நாட் அவுட் கொடுத்த பிறகு லியாம் பிளங்கெட் சிக்கினார் வாட்சனிடம், ஆஃப் ஸ்டம்புகு வெளியே சற்றே எகிறிய பந்தை குறுக்குசால் ஓட்டி மிட்விக்கெட்டில் அபாரமான சிக்ஸ் அடித்த வாட்சன், அடுத்த லெக் திசை ஓவர் பிட்ச் பந்தை ஹை பிளிக்கில் ஸ்கொயர் லெக் மேல் அடித்த சிக்ஸ் சச்சின் டெண்டுல்கரை நினைவூட்டிய ஷாட் ஆகும். அதே ஓவரில் டுபிளெசிஸ் மிக அருமையாக சகவீரர் டிவில்லியர்ஸ் போல் ஸ்கூப் செய்ய பைன் லெக்கில் ஒரு சிக்ஸ். 20 ரன்கள் கொடுத்தார் பிளெங்கெட். அடுத்து ஆவேஷ் கானை ஒரு லக்கி சிக்ஸ் அடித்தார் வாட்சன், அது கேட்ச் ஆகியிருக்கும் ஆனால் இந்தக் காலத்துப் பேட், காகிதத்தைச் சுருட்டி எறிந்தாலே சிக்ஸ் செல்லும் குறுகிய பவுண்டரி ஆகியவற்றினால் சிக்ஸ் ஆனது. மீண்டும் 7வது ஓவரில் பிளெங்கெட்டை 2 சிக்சர்கள் விளாசிய வாட்சன். தெவாட்டியாவை ஒரு சிக்ஸ் அடித்து 25 பந்துகளில் 53 என்று அரைசதம் வந்தார், பிறகு அதே ஓவரில் அரைசதத்தை இன்னொரு சிக்ஸ் மூலம் கொண்டாடினார். மொத்தம் 7 சிக்சர்கள் அடித்தார், பெரும்பாலும் லெக் திசை சிக்சர்கள். 10 ஒவர்களில் 96/0. எதிர்முனையில் டுபிளெசிஸ் நிதானத்துடன் 33 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.

இருவரும் இணைந்து 102 ரன்கள் எடுத்த போது விஜய் சங்கர், டுபிளெசிஸ் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்த ஓவரில் கிளென் மேக்ஸ்வெல் சுரேஷ் ரெய்னாவை 1 ரன்னில் வீட்டுக்கு அனுப்பினார். 40 பந்துகளில் 78 ரன்கள் எடுத்த வாட்சன் அமித் மிஸ்ராவை வெளுக்க நினைத்து ஆட்டமிழந்தார். 14வது ஓவர் முடிவில் 130/3, என்று தோனிக்கு நல்ல நடைமேடை அமைத்துக் கொடுக்கப்பட்டது.

மீண்டும் சிக்சர்கள் வழிக்கு திரும்பிய தோனி

போல்ட் வந்தவுடனேயே தோனிக்கு ஷார்ட் பிட்ச் பந்து வீசினார், டோண்ட் பவுல் என்று தோனி அதனை அரக்க சிக்ஸ் அடித்தார். சரி ஃபுல் பந்து போடுகிறேன் என்றார் போல்ட் மீண்டும் தோனியின் பேட் ஸ்பீடுக்கு லாங் ஆனில் சிக்ஸ். சமீப காலங்களாக இந்தியாவுக்கு ஆடும் போது ஆடுவதை விட தற்போது தோனி நன்றாகவே ஆடுகிறார். இந்த ஓவரில் 21 ரன்கள். மேலும் 2 புல்டாஸ்களை தோனி சிக்சருக்குத் தூக்க 22 பந்துகளில் 5 சிக்சர்களுடன் அரைசதம் எடுத்தார்.

 

கொலின் மன்ரோ தோனி 31இல் இருக்கும் போது எளிதான கேட்சை விட்டார்..(உஷ்!). ராயுடு தோனி கூறியது போல் எந்த டவுனிலும் சிறப்பாக ஆடுபவர், அதனை மீண்டுமொரு முறை நிரூபித்தார். 24 பந்துகளில் 41 ரன்கள் எடுத்த அவர் இந்த ஐபிஎல்-ல் 370 ரன்கள் எடுத்து முதலிடம் வகிக்கிறார். கடைசி 5 ஓவர்களில் 74 ரன்கள். சூப்பர் கிங்ஸ் 3வது முறையாக 200க்கும் மேல் ரன் குவித்தது. மேக்ஸ்வெல் ஒரு ஓவரில் 5 ரன்களுக்கு 1 விக்கெட், நன்றாக வீசியவருக்கு ஏன் இன்னொரு ஓவர் கொடுக்கவில்லை? (இன்னொரு உஷ்...) அமித் மிஸ்ரா 4 ஓவர்களில் சிக்கனம் காட்டி 30 ரன்களுக்கு 1 விக்கெட். ஆவேஷ் கான் வேகம் வாட்சன், தோனி உட்பட அனைவரையுமே ஆட்டியது இவர் 4 ஓவர்களில் 28 ரன்கள், தோனி விக்கெட்டை வீழ்த்தியிருக்க வேண்டியது, பாவம், மன்ரோ கேட்சை விட்டார்.

தோனியின் அடிவயிற்றைக் கலக்கிய ரிஷப் பண்ட், விஜய் சங்கர் காட்டடி!

சிஎஸ்கே அணியின் புதிய வேகப்பந்து வீச்சாளர்கள் அருமையாக வீசினர். முதல் ஓவரிலேயே இங்கிடி, கொலின் மன்ரோவை சில பந்துகள் பீட் செய்து 1 ரன் தான் கொடுத்தார். கேரள வேகப்பந்து வீச்சாளர் ஆசிப்பை பிரிதிவி ஷா 2 பவுண்டரிகள் அடித்தார். ஆனால் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை வீசி ஷாவை அவசரப்படுத்தி புல்ஷாட்டில் வெளியேற்றினார் ஆசிப், ஜடேஜா கேட்ச் எடுத்தார். அய்யர் இறங்கி ஒரு அருமையான பவுண்டரி அடித்தார், மன்ரோ, வாட்ச்ன் ஓவரை சிக்ஸ், பவுண்டரியுடன் வரவேற்றார். மீண்டும் ஆசிப்பை மன்ரோ வெளுத்து வாங்கி 2 பவுண்டரிகள் 1 சிக்சர் அடித்தார். ஆனால் பிரிதிவி ஷாவை வீழ்த்தியது போல் மீண்டும் மன்ரோவின் உடலுக்கு நேராக ஒரு பந்தை வீச ஷாட் சிக்காமல் கேட்ச் ஆனது. ஆசிப் 2 ஓவர்களில் 25 ரன்கள் என்றாலும் 2 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

பண்ட் இறங்கி முன் காலை விலக்கிக் கொண்டு வாட்சனை பளார் என்று ஒரு சிக்ஸருடன் எண்ணிக்கையைத் தொடங்கினார். அடுத்த பந்து கட் ஷாட்டில் பவுண்டரி. பவர் பிளே முடிவில் 59/2 என்று நன்றாகச் சென்று கொண்டிருக்கும் போதுதான் ஷ்ரேயஸ் 13 ரன்களில் வாட்சனிடம் ஷார்ட் கவரில் அடித்து இல்லாத சிங்கிளுக்கு ஓடி ரன் அவுட் ஆனார் (உஷ்.. கண்டுக்காதீங்க) மேக்ஸ்வெல், ஜடேஜா ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய பந்திற்கு தவறான லைனில் ஆடி பவுல்டு ஆனார். ஏன் இப்படி ஆட வேண்டும்? கேக்காதீங்க...

ஹர்பஜன், ஜடேஜா விறுவிறுவென சிக்கனமாக ஓவரை வீசினர். இருவரும் 6 ஓவர்களில் 38 ரன்களையே கொடுத்தனர். ஹர்பஜன் 3 ஓவர்களில் 13 ரன்களையே கொடுத்தவர் கடைசியில் பண்ட்டிடம் சிக்கி ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரி கொடுத்தார். இதனால் ஒரு ஓவரில் 13 ரன்கள் கொடுத்து 4 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்தார், ஜடேஜா, ஹர்பஜன இருவரும் கோட்டாவை முடிக்கும் போது 8 ஓவர்களில் இருவரும் 57 ரன்களையே கொடுத்திருந்தனர். ஆட்டத்தின் போக்கில் இது சிக்கனமான பந்து வீச்சே.

13 ஓவர்களில் 117/4, வெற்றிக்கு தேவைப்படும் ரன் விகிதம் 15.83. அப்போதுதான் பிராவோவை விஜய் சங்கர் இன்ஸ்விங்கரை லாங் ஆன் தலைக்கு மேல் சிக்ஸ்க்கு அனுப்பினார். ஆசிப் பந்தை தூக்கி அடித்து ராயுடுவின் மிஸ் பீல்டிங்கில் பவுண்டரி அடித்து 34 பந்துகளில் அரைசதம் கண்டார். அந்த ஓவரில் 2 பவுண்டரி 1 சிக்ஸ் 18 ரன்கள் வந்தது. பிறகு பிராவோ ஓவரில் 2 பவுண்டரிகள். 3 ஓவர்களில் 55 ரன்கள் தேவை. அப்போது 45 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 79 ரன்கள் விளாசி தோனியின் வயிற்றில் புளியைக் கரைத்த ரிஷப் பண்ட், இங்கிடி பந்தை ஜடேஜாவிடம் கவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 12 பந்துகளில் 49 ரன்கள் தேவை.

அப்போதுதான் பிராவோ ஓவரில் விஜய் சங்கர் பொளந்தார். லாங் ஆனில் முதல் சிக்ஸ். மீண்டும் தவறான லெந்த், புல் ஷாட், மிட்விக்கெட்டில் சிக்ஸ். மீண்டும் லெந்த் பால் லாங் ஆனில் சிக்ஸ். தோனி டென்ஷனாகிவிட்டார். இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் அவரது தலைமையின் கீழ் 8-0 என்றும் பிறகு 3-1 என்றும் 2014-15 ஆஸி.தொடரில் உதை வாங்கிய போதும் அனைத்திற்கும் மேலாக வங்கதேசத்திடம் அங்கு போய் ஒருநாள் தொடரில் உதை வாங்கிய போதும் இந்திய அணிக்காக அவர் இப்படி டென்ஷனாகிப் பார்த்ததில்லை. இந்திய அணிக்குக் கூல், சென்னைக்கு ஹாட்!

6 பந்துகள் 28 ரன்கள் என்றவுடன் லேசாக தோனிக்கு வயிற்றில் மோட்டார் ஓடியிருக்கும். ஆனால் ஒரு சிக்சரைத்தான் விஜய் சங்கர் அடிக்க முடிந்தது 198/5 என்று இடைவெளியை 13 ரன்களாகக் குறைத்தார். விஜய் சங்கர் 31 பந்துகளில் 1 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 54 நாட் அவுட். ஏறக்குறைய வெற்றிக்கு அருகில் வந்தனர் என்றே கூற வேண்டும், சென்னை மீண்டும் கடைசி ஓவர்களில் சொதப்பி போராடித்தான் வென்றது, அல்லது பேட்டிங் பவரினால் வென்றது.

ஆட்ட நாயகன் வாட்சன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x