

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்கா.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே தனது முதல் இன்னிங்ஸில் 92.4 ஓவர்களில் 256 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா 158.3 ஓவர்களில் 397 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் டூபிளெஸ்ஸிஸ் 98, டி காக் 81 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் 2-வது இன்னிங்ஸை ஆடிய ஜிம்பாப்வே அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 13 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது நாளான செவ்வாய்க்கிழமை தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே 76.2 ஓவர்களில் 181 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக சிபான்டா 45 ரன்களும், முதும்பாமி 43 ரன்களும் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்க தரப்பில் பியட் 4 விக்கெட்டுகளையும், ஸ்டெயின், மோர்கல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து 41 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 10.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. பீட்டர்சன் 17, டூபிளெஸ்ஸிஸ் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக எல்கர் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.