

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 20-வது காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமையோடு நிறைவடைந்தது.
தொடக்க விழாவோடு சேர்த்து 12 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா 15 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 64 பதக்கங்களுடன் 5-வது இடத்தைப் பிடித்தது. கடந்த காமன்வெல்த் போட்டியில் 38 தங்கம் உள்பட 101 பதக்கங்களுடன் 2-வது இடத்தைப் பிடித்தது இந்தியா.
காமன்வெல்த் போட்டியில் கடந்த 28 ஆண்டுகளாக கோலோச்சி வந்த ஆஸ்திரேலியா இந்த முறை இங்கிலாந்திடம் முதலிடத்தை இழந்துள்ளது.
இங்கிலாந்து அணி 58 தங்கம், 59 வெள்ளி, 57 வெண்கலம் என மொத்தம் 174 பதக்கங்களுடன் முதலிடத்தையும், ஆஸ்திரேலியா 49 தங்கம், 42 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தம் 137 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், கனடா 32 தங்கம், 16 வெள்ளி, 34 வெண்கலம் என மொத்தம் 82 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும், ஸ்காட்லாந்து 19 தங்கம், 15 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 53 பதக்கங்களுடன் 4-வது இடத்தையும் பிடித்தன. அடுத்த காமன்வெல்த் போட்டி 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.