Published : 12 May 2018 07:29 AM
Last Updated : 12 May 2018 07:29 AM

கட்டாய வெற்றி நெருக்கடியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி: கிங்ஸ் லெவன் பஞ்சாப்புடன் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் இன்று மாலை இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி 10 ஆட்டங்களில் 6 வெற்றி, 4 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது. அதேவேளையில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி 11 ஆட்டங்களில் 5 வெற்றி, 6 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இரு அணிகளுமே தங்களது கடைசி ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தன. கொல்கத்தா அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடமும், பஞ்சாப் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடமும் வீழ்ந்திருந்தன.

பஞ்சாப் அணியின் பேட்டிங் தொடக்க வீரர்களான கிறிஸ் கெயில், கே.எல்.ராகுல் ஆகியோரை பெரிதும் சார்ந்துள்ளது. இந்த சீசனில் கே.எல்.ராகுல் 471 ரன்களும், கெயில் 311 ரன்களும் சேர்த்துள்ளனர். ராஜஸ்தான் அணிக்கு எதிராக 159 ரன்கள் இலக்கை விரட்டிய போது கே.எல்.ராகுலை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சிறந்த பங்களிப்பை வழங்கத் தவறினர். கே.எல்.ராகுல் 70 பந்துகளில் 95 ரன்கள் விளாசி கடைசி வரை களத்தில் நின்ற போதும் அணியின் தோல்வியை தவிர்க்க முடியாமல் போனது. கடந்த ஆட்டத்தில் சோபிக்க தவறிய கெயில் மீண்டும் மட்டையை சுழற்றக்கூடும்.

இவர்கள் இருவரை தவிர பேட்டிங்கில் கருண் நாயர் மட்டுமே சீராக ரன்கள் சேர்த்து வருகிறார். இந்த சீசனில் 243 ரன்கள் சேர்த்துள்ள அவரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். யுவராஜ் சிங், ஆரோன் பின்ச், மயங்க் அகர்வால் ஆகியோரது மோசமான பார்ம் நடுகள வரிசை பேட்டிங்கை ஆட்டம் காணச் செய்துள்ளது. இதனால் இவர்கள் 3 பேரும் சிறந்த பங்களிப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பந்து வீச்சில் மோகித் சர்மா, அங்கித் ராஜ் புத், ஆன்ட்ரூ டை ஆகியோருடன் சுழலில் அஸ்வின், முஜீப் உர் ரஹ்மான் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். இதில் ஆன்ட்ரூ டை 8 ஆட்டங்களில் 16 விக்கெட்கள் கைப்பற்றி உள்ளார். ஓவருக்கு அவர், சராசரியாக 7.77 ரன்களை மட்டுமேவிட்டுக்கொடுத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக அங்கித் ராஜ் புத், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் 14 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளனர். இந்த பந்து வீச்சு கூட்டணி, கொல்கத்தா பேட்டிங் வரிசைக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும்.

கொல்கத்தா அணி கட்டாய வெற்றி நெருக்கடியில் களமிறங்குகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் அந்த அணி வெற்றி பெற வேண்டும். தொடக்க வீரர்களான கிறிஸ் லின், சுனில் நரேன் ஜோடி சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது பின்னடைவாக உள்ளது. தினேஷ் கார்த்திக் மட்டுமே சீராக ரன்கள் குவிப்பவராக உள்ளார். 11 ஆட்டங்களில் 321 ரன்கள் சேர்த்துள்ள அவர், மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடும். துணை கேப்டனான ராபின் உத்தப்பா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறுகிறார். இதனால் மிடில் ஆர்டர் பேட்டிங் நெருக்கடிக்கு தள்ளப்படுகிறது.

இன்றைய ஆட்டத்தில் அவர், கூடுதல் பொறுப்புடன் விளையாடும் பட்சத்தில் அணி வலுப்பெறும். நித்திஷ் ராணா, சுப்மான் கில், ஆந்த்ரே ரஸ்ஸல், ரிங்கு சிங் ஆகியோரும் மட்டையை சுழற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கொல்கத்தா அணியின் பந்து வீச்சு இந்த சீசனில் சுழற்பந்து வீச்சை சார்ந்தே இருந்து வருகிறது. ஆனால் கடந்த ஆட்டத்தில் மும்பைக்கு எதிராக பியூஸ் சாவ்லா, குல்தீப் யாதவ் கூட்டாக 7 ஓவர்களை வீசி 91 ரன்களை தாரை வார்த்திருந்தனர். இதேபோல் வேகப்பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணாவும் 4 ஓவர்களில் 41 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். இதனால் இன்றைய ஆட்டத்தில் பந்து வீச்சில் சில மாற்றங்கள் இருக்கக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x